கேரளா அரசு மருத்துவமனையில் மின்கசிவு! 5 பேர் உயிரிழப்பு! 200 நோயாளிகள் பாதிப்பு!
கேரளா கோழிக்கூட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட மின்கசிவால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு பகுதியில் மின்கசிவு ஏற்பட்டது. இந்த மின்கசிவினால் ஏற்பட்ட புகை பாதிப்பால் , அதனை சுவாசித்த நோயாளிகள் 5 பேர் உயிரிழந்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
இந்த உயிரிழப்புகளை இயற்கைக்கு மாறான உயிரிழப்புகள் என காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். நேற்று இரவு இந்த மின்கசிவு விபத்தால் வெஸ்ட் ஹில்லில் வசிக்கும் கோபாலன், கோயிலாண்டியைச் சேர்ந்த கங்காதரன், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த கங்கா, வயநாட்டைச் சேர்ந்த நசீரா மற்றும் வடகராவைச் சேர்ந்த சுரேந்திரன் ஆகியோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அவசர சிகிச்சை பிரிவில் உள்ள UPS (பேட்டரி)-ல் ஏற்பட்ட மின்கசிவு மற்றும் அதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், மருத்துவமனை மின்கசிவால் உயிரிழப்புகள் ஏற்பட்டது என்ற குற்றசாட்டை மருத்துவமனை நிர்வாகம் மறுத்து வருகிறது.
அதில், மூன்று நோயாளிகள் உடல்நலக் குறைவால் இறந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், அவர்களது உறவினர்கள் அவர்கள் இறப்பில் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. வயநாட்டைச் சேர்ந்த நசீரா மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த கங்கா ஆகியோர் தற்கொலை முயற்சித்ததாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையை அடைவதற்கு முன்பே கங்கா உயிரிழந்துவிட்டார் என மருத்துவக் கல்லூரி முதல்வர் தெரிவித்தார். இதற்கிடையில், நசீராவின் சகோதரர் அவரது மரணத்தில் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
இந்த உயிரிழப்புகள் குறித்து போலீசார் தரப்பு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. உயிரிழந்த 5 பேரின் உடல்கள் தற்போது பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது. மேலும், மின்கசிவு காரணமாக கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். விசாரணை முடிந்த பிறகே 5 பேரின் உயிரிழப்புக்கு காரணம் மின்கசிவா அல்லது வேறு எதுவுமா என்பது தெரியவரும்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025