இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
எதிரிகளை நாம் வீழ்த்திய விதத்தை அவர்களால் எப்போதும் மறக்க முடியாது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஸ்ரீநகர் பகுதிக்கு சென்று விமானப்படை தளத்தில் பார்வையிட்டு வீரர்களுக்கு மத்தியில் சில விஷயங்களை பேசினார். அதில் பேசிய அவர் ” ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெற்றிகரமாக நடந்தது. இந்த நடவடிக்கை நம்மளை பாதுகாத்துக் கொள்ள மட்டுமல்ல, இந்தியாவுக்கு பதிலடியும் கொடுக்க தெரியும் எனவும் நிரூபித்துள்ளது.
எதிரிகளை நாம் வீழ்த்திய விதத்தை அவர்களால் எப்போதும் மறக்க முடியாது. தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் இதுதான் பெரியது. இந்த மாதிரி கடினமான சூழலில் உங்களுடன் இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன் நான் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தாலும், முதலில் இந்திய குடிமகன் இந்திய குடிமகனாக உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
எதிரிகளை அழித்த உங்களின் சக்தியை உணர நான் வந்துள்ளேன் நேரம் வரும் போது கடினமான முடிவுகளை எடுப்போம் என்பதற்கான உறுதிமொழிதான் ஆபரேஷன் சிந்தூர். முதலில், பயங்கரவாதத்தையும் பயங்கரவாதிகளையும் எதிர்த்துப் போராடியபோது துணிச்சலான வீரர்களின் உச்சபட்ச தியாகத்திற்கு நான் தலைவணங்க விரும்புகிறேன்.
அவர்களின் நினைவுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். பஹல்காமில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன். காயமடைந்த வீரர்களின் துணிச்சலுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன், மேலும் அவர்கள் விரைவில் குணமடைய கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன். பாதுகாப்பு அமைச்சராக இருப்பதோடு மட்டுமல்லாமல், நான் இங்கே ஒரு தூதராகவும் இருக்கிறேன். முழு நாட்டின் வாழ்த்துகள், பிரார்த்தனைகள் மற்றும் நன்றியுணர்வுடன் நான் இங்கே இருக்கிறேன். ” எனவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” ஒரு காலத்தில் பாகிஸ்தான் கடன் கேட்க சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றது, மறுபுறம், இன்று நமது நாடும் சர்வதேச நாணய நிதியம் ஏழை நாடுகளுக்கு கடன் வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்திற்கு நிதி வழங்கும் நாடுகளின் பிரிவில் இருந்து வருகிறது.
இதில் இருந்தே தெரிந்துகொள்ளலாம் நாம் நாடு எப்படி பட்ட இடத்தில் இருக்கிறது என்று. நான் முழு உலகத்தையும் கேட்கிறேன், இவ்வளவு பொறுப்பற்ற மற்றும் முரட்டுத்தனமான (பாகிஸ்தான்) நாட்டின் கைகளில் அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக உள்ளனவா? பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) மேற்பார்வையின் கீழ் எடுக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுப்பதை நிறுத்திக்கொள்ளவேண்டும். அதைப்போல, போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் இந்தியா செல்லும். பாகிஸ்தான் மிரட்டலுக்கு இந்தியா பயப்படாது ” எனவும் அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.