அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க இந்தியா 50% வரியை விதிக்கணும்! சசி தரூர் பேச்சு!

இந்தியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 50 சதவீத வரியை அறிவித்துள்ள நிலையில் அமெரிக்க பொருட்களின் இறக்குமதி மீது இந்தியா சராசரியாக 17 சதவீதம் மட்டுமே வரி விதிக்கிறது முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர்

trump Shashi Tharoor

புதுடெல்லி: காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்திருப்பது குறித்து புதுடெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கடும் கண்டனம் தெரிவித்தார். இது குறித்து அவர் பேசுகையில் “அமெரிக்காவின் இந்த ஒருதலைபட்சமான வரி விதிப்பு, இந்தியாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் மிரட்டலாக உள்ளது. இந்தியா அமெரிக்க பொருட்களுக்கு சராசரியாக 17 சதவீத வரி மட்டுமே விதிக்கிறது. இதற்கு பதிலடியாக, நாமும் அமெரிக்க பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

தரூர், இந்தியாவின் வர்த்தக உறவுகளை பல்வகைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை விளக்கினார். “அமெரிக்காவை மட்டும் நம்பியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்று ட்ரம்ப் மிரட்டுவதற்கு இந்தியா அடிபணிய வேண்டியதில்லை. சீனா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் உள்ளிட்ட பிற நாடுகளுடன் வர்த்தகத்தை விரிவுபடுத்தலாம்,” என்று கூறினார்.

மேலும், அமெரிக்காவே ரஷ்யாவிடமிருந்து யுரேனியம், பல்லேடியம், உரங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்வதை சுட்டிக்காட்டி, “அமெரிக்காவின் இந்த இரட்டை வேடம் ஏற்புடையதல்ல. சீனாவுக்கு 90 நாள்கள் அவகாசம் கொடுத்து, இந்தியாவுக்கு 3 வாரங்கள் மட்டுமே அளிப்பது நியாயமற்றது,” என்று விமர்சித்தார். அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் குறித்து பேசிய தரூர், “இந்தியா மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மற்றும் பால் பொருட்கள் இறக்குமதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. இது நமது உள்நாட்டு விவசாயிகளை பாதுகாக்கவே. ஆனால், ட்ரம்பின் வரி விதிப்பு, இந்தியாவை பேச்சுவார்த்தையில் அடிபணிய வைக்கும் முயற்சியாக உள்ளது. இதை இந்தியா எதிர்க்க வேண்டும்,” என்றார்.

அவர், உலக வர்த்தக அமைப்பு (WTO) மற்றும் பிற சர்வதேச அமைப்புகளின் உதவியுடன் சட்டரீதியாக இந்த வரி விதிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். “நியாயமான சர்வதேச வர்த்தக விதிகளை உருவாக்க இந்தியா தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்,” என்று கூறினார்.

தரூர், இந்திய பொருளாதாரத்தின் பலத்தை வலியுறுத்தி, “ரஷ்ய எண்ணெய் இறக்குமதி இந்தியாவுக்கு மலிவான எரிசக்தியை வழங்குகிறது. இதை நிறுத்தினால், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து பொதுமக்கள் பாதிக்கப்படுவர். அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்சாமல், இந்தியா தனது பொருளாதார முன்னுரிமைகளை பாதுகாக்க வேண்டும்,” என்றார். மேலும், “அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஒரு பேச்சுவார்த்தை உத்தியாக இருக்கலாம். ஆனால், இந்தியாவின் பேச்சுவார்த்தைக் குழு உறுதியுடன் செயல்பட வேண்டும்,” என்று அறிவுறுத்தினார்.