டெல்லி :டெல்லியில் உள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் இல்லத்தில் நேற்றைய தினம் (ஆகஸ்ட் 7) இந்தியா கூட்டணி (INDIA alliance) கட்சித் தலைவர்களின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சரத் பவார், அகிலேஷ் யாதவ், மெகபூபா முப்தி உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், குறிப்பாக கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில் கூறப்பட்ட முறைகேடுகள் (“வோட் திருட்டு” – Vote Chori) குறித்து ராகுல் காந்தி ஆதாரங்களுடன் விளக்கமளித்தார். இந்த முறைகேடு நாட்டின் பல தொகுதிகளில் நடைபெறுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
மேலும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்தவும், எதிர்கால அரசியல் உத்திகளை வகுக்கவும் இந்தக் கூட்டம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மேலும், இந்தக் கூட்டம் நாடாளுமன்ற அமர்வு நடைபெறும் சூழலில், எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் உறுதியை வெளிப்படுத்துவதற்காக நடைபெற்றது.
ஆலோசனைக்கு பின், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு நேற்று இரவு விருந்தளித்தார். சொல்லப்போனால், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இந்தியா கூட்டணி தலைவர்கள் நேரடியாக சந்திக்கும் முதல் நிகழ்வாக இது அமைந்தது.
இந்த விருந்தில் ஜேஎம்எம் எம்பி மஹுவா மாஜி, காங்கிரஸ் எம்பி பிரமோத் திவாரி, ஜேகேஎன்சி தலைவர் பரூக் அப்துல்லா, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
