டெல்லி :இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, பாகிஸ்தானுக்கு எதிராக அளவுக்கு அப்பாற்பட்ட கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். “உலக வரைபடத்தில் நீடிக்க விரும்பினால், பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று அவர் தெளிவாகக் கூறியுள்ளார். இந்தியா இனி நிதானம் காக்காது அதாவது, முந்தைய காலங்களில் காட்டியிருந்த பொறுமையையும் கட்டுப்பாட்டையும் இனி கடைப்பிடிக்க மாட்டோம் என்று தளபதி திவேதி வலியுறுத்தினார்.
இந்த அறிக்கை, இரு நாடுகளுக்கிடையே நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த எச்சரிக்கை, ராஜஸ்தானின் அனுப்கர்ஹ் ராணுவ இடத்தில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியின் போது வெளியிடப்பட்டது. அங்கு இந்திய வீரர்களிடம் பேசிய தளபதி திவேதி, பாகிஸ்தானின் எல்லைத் தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக, இந்தியாவின் முந்தைய ராணுவ நடவடிக்கையான “ஆபரேஷன் சிந்தூர் 1.0” பற்றி அவர் விரிவாகப் பேசினார்.
அந்த ஆபரேஷனில், இந்தியா பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக அழித்தது மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கு ஆதாரங்களையும் வழங்கியது என்று அவர் நினைவூட்டினார். இருப்பினும், அப்போது காட்டியிருந்த கட்டுப்பாட்டை (restraint) இனி இந்தியா காட்ட மாட்டோம் என்று தளபதி திவேதி தெளிவுபடுத்தினார்.தளபதி திவேதியின் பேச்சு, பாகிஸ்தானின் மக்களுக்கு எதிரானது அல்ல என்று தெளிவாக வலியுறுத்தியது.
மேலும், “பாகிஸ்தான் மக்களுக்கு எந்தக் குற்றச்சாட்டும் இல்லை; ஆனால், அவர்களின் அரசு ஆதரவுடன் நடக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று அவர் கூறினார். இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் முழு தயாரிப்புடன் இருப்பதாகவும், எல்லைப் பகுதிகளில் உள்ள வீரர்களை எப்போதும் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தினார். “கடவுள் விரும்பினால், விரைவில் இத்தகைய வாய்ப்பு (opportunity) வரலாம்” என்று அவர் கூறினார்.
