டெல்லி : ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, டெல்லியில் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' (CJP) அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் நடத்திய பேரணி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியாகப் பேரணியாகச் செல்ல சிஜேபி (CJP) அமைப்பின் இளைஞர் அணியினர் திட்டமிட்டிருந்தனர். கல்வித்துறை விவகாரங்கள் மற்றும் அமைச்சரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தப் போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்தனர்.
பேரணியாகச் செல்ல முயன்ற சிஜேபி கட்சியினரை, டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் கட்டுக்கடங்காத சூழல் நிலவியதால், பேரணியைத் தடுக்க போலீசார் தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர். இந்தச் சம்பவத்தால் ஜந்தர் மந்தர் மற்றும் நாடாளுமன்றப் பகுதிகளில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.
இந்த தடியடி சம்பவம் மற்றும் அமைப்பின் போராட்டத்தின் நோக்கம் குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. கல்வித்துறையில் நிலவும் சர்ச்சைகளே இந்த இளைஞர்களின் போராட்டத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
