பெங்களுர் :கர்நாடகாவில் ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியில் 2024 ல் நடந்த தேர்தலில் எவ்வாறு மோசடி செய்யப்பட்டது என்பதை நிரூபிக்க ராகுல் காந்தி வலுவான ஆதாரங்களை முன்வைத்துள்ளார். இது, பெங்களூரு சென்ட்ரல் மக்களவைத் தொகுதியிலுள்ள மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதி தொடர்பானது. இது அந்தத் தொகுதியின் எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.
அதன்படி, கர்நாடகாவில் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் மட்டுமே 1,00,250 வாக்குகள் திருடப்பட்டதாகவும், அங்கு 12,000 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.
இதனையடுத்து, வாக்காளர் பதிவு விதிகள் 2020 இன் படி, ராகுல் கூறிய போலி வாக்காளர்களின் விவரங்களுடன் தன்னை வந்து இன்று (ஆக.8) சந்திக்க வேண்டுமென்றும், இல்லையென்றால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் பாரதிய நியாய சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் எனவும் ராகுல் காந்திக்கு கர்நாடகா தலைமைத் தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பியிருக்கிறார்.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இன்று (ஆகஸ்ட் 8, 2025) கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஃப்ரீடம் பார்க்கில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அதன் பின்னர், கர்நாடக தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.
