டெல்லி :புது டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி விகித மறுசீரமைப்பு, இழப்பீட்டு மேல்வரி மற்றும் உயிர் & மருத்துவ காப்பீடு குறித்த மாநில நிதியமைச்சர்களின் குழு (Group of Ministers – GoM) கூட்டத்தில், ஜிஎஸ்டி வரி விகிதங்களான 12% மற்றும் 28% சலுகைகளை நீக்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு முன்மொழிந்த இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி அமைப்பு (5% மற்றும் 18%) மற்றும் சில ஆடம்பர மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு (sin goods) 40% என்ற சிறப்பு விகிதத்தை அமல்படுத்துவதற்கு இந்தக் குழு ஆதரவு தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி சீர்திருத்தம் செய்யப்படும் என பிரதமர் மோடி அறிவித்த நிலையில், ஜிஎஸ்டியில் 12%, 28% வரி விகிதங்களை நீக்க நிதியமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில் (செப்டம்பர் அல்லது அக்டோபர் 2025) இறுதி செய்யப்படலாம், மேலும் இது பொருட்களின் விலையை குறைத்து, வரி அமைப்பை எளிமையாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
புதிய ஜிஎஸ்டி மாற்றங்கள் மக்களை தன்னிறைவு பெற்றவர்களாக மாற்றும் என்றும் சிறு குறு தொழில்துறைகள் ஏற்றம் பெறும் என்றும் ஜிஎஸ்டிக்கான அமைச்சர்கள் குழு கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார்.
