தமிழன் கங்கையை வெல்வான் – மக்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி உரை!
கங்கை கொண்ட சோழபுரம் என்ற பெயரை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், தமிழன் கங்கையை வென்றிருக்கிறான்; தமிழன் கங்கையை வெல்வான் என்று மக்களவையில் கனிமொழி உரையாற்றியுள்ளார்.

டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், “தமிழன் கங்கையை வெல்லுவான், நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என்று உரக்க முழங்கினார். அவர் தனது பேச்சில், “கங்கைகொண்ட சோழன், கங்கையை வென்றவன். பஹல்காம் தாக்குதலை நீங்கள் தடுத்திருக்க வேண்டாமா?
முந்தைய தாக்குதலில் இருந்து பாடம் கற்றிருக்க வேண்டாமா? விஸ்வகுரு என்ன கற்றுக் கொண்டார்?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா எதிர்க்கட்சிகள் மீது பழி போடுவதில் மும்முரமாக இருப்பதாகவும், உளவுத்துறை மற்றும் RAW போன்ற துறைகள் தாக்குதல் நடக்கும் வரை என்ன செய்து கொண்டிருந்தன என்றும் கேள்வி எழுப்பினார்.
தேசபக்தியில் தமிழர்கள் ஒருபோதும் குறைந்தவர்கள் இல்லை என்றும், தேசத்தை தமிழ்நாடு எந்த வகையிலும் விட்டுக்கொடுத்ததில்லை என்றும் வலியுறுத்தினார். ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் தமிழர்களின் பெருமை, கலாசாரத்தை பாஜக கண்டறிந்து விடுகிறது.
ஆனால், தமிழர்கள் தொன்மையை கண்டறிந்த கீழடி நாகரிகத்தை ஏற்க மறுக்கிறது ஒன்றிய பாஜக அரசு. நீங்கள் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வந்தீர்கள் தமிழன் கங்கையை வெல்வான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தீவிரவாத தாக்குதலால், சுற்றுலாவை நம்பி இருந்த மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
மக்களின் பாதுகாப்புக்கு அரசு தான் பொறுப்பு மக்களை அரசு பாதுகாக்காதது ஏன்? சிந்தூர் நடவடிக்கையின் போது, எதிர்க்கட்சிகள் வெளிநாடுகளுக்கு சென்று இந்தியாவிற்காக துணை நின்றோம். ஆனால் இந்தியாவில் அரசியல் ஏன் பிரித்தாள்வதாக உள்ளது? இந்தியா ஒரே தேசமாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.