ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மத்திய அமைச்சரவையில் இருந்து இரண்டு தெலுங்கு தேச அமைச்சர்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்குதேசம் இணைந்தபோது, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்தும், சிறப்பு நிதி உதவியும் அளிக்கப்படும் என்பன உள்ளிட்ட 19 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆனால், சிறப்பு அந்தஸ்து கோரிக்கை நிறைவேற்றப்படாதால் தெலுங்குதேச எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விஜயவாடாவில் நேற்றிரவு செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஒய்.எஸ்.சவுத்ரி, அசோக் கஜபதிராஜு ஆகியோர் இன்று ராஜினாமா செய்வார்கள் என்று அறிவித்தார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்ற தவறிவிட்டதாக சந்திரபாபு குற்றம் சாட்டினார். ஆந்திராவின் நலன் கருதி மத்திய அமைச்சரவையில் நீடித்து வந்ததாக கூறிய அவர், மாநில உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது என்று குறிப்பிட்டார்.சந்திரபாபு நாயுடு கூட்டணியில் நீடிப்பது குறித்து தெலுங்குதேசம் கட்சி முடிவெடுக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.