உயிரிழந்ததாக தேர்தல் ஆணையம் கூறிய இருவர் உச்சநீதிமன்றத்தில் ஆஜர்.!

உயிரிழந்துவிட்டதாக நீக்கப்பட்ட இருவரை உச்ச நீதிமன்றத்தில் நேரில் கொண்டுவந்து நிறுத்தி சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ், தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளை அம்பலப்படுத்தினார்.

SIR - Supreme Court

பீகார் :பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகளின்போது, தேர்தல் ஆணையம் உயிரிழந்ததாகக் கருதி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிய இருவரை, அரசியல் ஆய்வாளர் யோகேந்திர யாதவ் உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

இந்தச் சம்பவம், பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட விவகாரத்துடன் தொடர்புடையது. நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வில், “தயவுசெய்து அவர்களைப் பாருங்கள். அவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இறந்ததாகத் தெரியவில்லை.

பாருங்கள், அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள்… பாருங்கள்… அவர்களிடம் ஆதார் அட்டைகள் மற்றும் பிற ஆவணங்கள் கூட உள்ளன, ஆனால் வரைவுப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை… நான் இன்னும் என்ன சொல்ல முடியும்,” என்று யாதவ் தரப்பு கூறினர்.

ஆனால் உச்ச நீதிமன்ற அமர்வு இந்த வழக்கில் அதிக ஆர்வம் காட்டவில்லை, அவர்களை திருப்பி அனுப்பியது மட்டுமல்லாமல், நீதிபதி பாக்சி, “இது ஒரு கவனக்குறைவான நடைமுறைப் பிழையின் விளைவாக இருக்கலாம், அதை சரிசெய்ய முடியும்” என்று கூறினார்.

தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி , இந்த மனுவை ஒரு “நாடகம்” என்று குறிப்பிட்டார். கவனக்குறைவால் பிழை ஏற்பட்டிருக்கலாம் இதை வைத்து ‘டிராமா’ செய்ய வேண்டாம் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இறுதியில், யாதவின் ஆய்விற்கு நீதிமன்றம் நன்றி தெரிவித்தது. வழக்கின் விசாரணை நாளை தொடரும் என தெரிவிக்கப்பட்டது.