வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு? நீதிமன்றத்தை நாட திரிணாமுல் காங்கிரஸ் முடிவு!

மேற்கு வங்க தேர்தல் முடிவுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாட திரிணாமுல் காங்கிரஸ் முடிவு செய்திருக்கிறார்.

Hero Image

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் 2026-ல் பாஜக பெரும் வெற்றி பெற்ற நிலையில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். “அவர்கள் என்னை பதவி நீக்கம் செய்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தட்டும்” என்று அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கையின் போது பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், தேர்தலை பாஜக “கொள்ளையடித்துவிட்டது” என்றும் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசியபோது, “தேர்தல் முடிவுகள் மக்களின் உண்மையான விருப்பத்தை பிரதிபலிக்கவில்லை. வாக்கு எண்ணிக்கையில் பரந்த அளவில் மோசடி நடைபெற்றுள்ளது. இதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். உச்ச நீதிமன்றத்தை நாடி நீதி கேட்போம்” என்று வலியுறுத்தினார்.

தேர்தல் முடிவுகளின்படி பாஜக பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில், மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதை ஏற்க மறுத்த மம்தா, “என்னை பதவி நீக்கம் செய்ய வேண்டுமானால் அவர்கள் அரசியலமைப்புப் படி நடவடிக்கை எடுக்கட்டும். நான் தானாக ராஜினாமா செய்ய மாட்டேன்” என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இந்த நிலை மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மம்தாவின் இந்த உறுதியான நிலைப்பாடு, பாஜகவுக்கு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். உச்ச நீதிமன்றத்தில் மம்தா தரப்பு தாக்கல் செய்யவிருக்கும் வழக்கின் முடிவு மேற்கு வங்க அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.