தீபாவளி பரிசாக குறைகிறதா ஜிஎஸ்டி வரி.? இனி 5%, 18% ஜிஎஸ்டி மட்டுமே – மத்திய அரசு தகவல்.!

பிரதமர் நரேந்திர மோடி, இன்று 79வது சுதந்திர தின உரையில், தீபாவளிக்கு மக்களுக்கு "இரட்டை தீபாவளி" பரிசாக ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்கள் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

GST Reforms

டெல்லி :ஜிஎஸ்டி (GST) சீர்திருத்தத்திற்கான நேரம் வந்துவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த 2017-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரியால் இன்றளவும் பல வர்த்தக சிரமங்கள் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், சுதந்திர தின விழாவில் பேசிய மோடி, ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் இந்தாண்டு தீபாவளிக்கு நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரிய பரிசு காத்திருக்கிறது என்றார். இதன் மூலம் பொருள்களின் விலை குறையும் என்றும் உறுதியளித்துள்ளார்.

அதாவது, தற்போதைய 5%, 12%, 18%, மற்றும் 28% என்ற நான்கு அடுக்கு ஜிஎஸ்டி வரி முறையை இரண்டு அடுக்குகளாக (‘நிலையான’ மற்றும் ‘தகுதி’ அடுக்கு) எளிமைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, 12% மற்றும் 28% வரி அடுக்குகள் நீக்கப்பட்டு, பெரும்பாலான பொருட்கள் 5% அல்லது 18% வரி அடுக்குக்கு மாற்றப்படலாம். அத்தியாவசிய பொருட்களின் வரி குறைக்கப்பட்டு, சொகுசு பொருட்களுக்கு (எ.கா., புகையிலை, சிகரெட்) 40% என்ற சிறப்பு வரி விதிக்கப்படலாம்.

இந்த சீர்திருத்தங்கள் சிறு, குறு தொழில்கள், நடுத்தர வர்க்கம், பெண்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் அமையும் எனவும், பொருட்களின் விலை குறைவதால் நுகர்வு அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் இதை விவாதிக்க உள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் கூட்டத்தில் இந்த மாற்றங்கள் குறித்து ஆலோசித்து, தீபாவளிக்கு முன் அல்லது அதற்கு பிறகு (அக்டோபர் 20, 2025) அமலாக்கப்படலாம்.

இதற்காக ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டு, மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்கப்படும். இந்த மாற்றம் ஆரம்பத்தில் அரசுக்கு சுமார் ரூ.50,000 கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தலாம் என்றாலும், நுகர்வு அதிகரிப்பால் பொருளாதார வளர்ச்சி ஊக்குவிக்கப்படும் என பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.