சென்னை : சட்டப்பேரவையில் பேசிய தவெக எம்.எல்.ஏ. விஜயகுமார், சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருபவர்களைப் பார்த்துப் பலரும் "சினிமா என்பது வெறும் பொழுதுபோக்குத் துறைதானே, அங்கிருந்து வருபவர்களுக்கு நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் என்ன தெரியும்?" என்று குறைத்து எடைபோட்டுக் கேள்வி எழுப்புவதாகக் குறிப்பிட்டார். அந்தக் கேள்விகளுக்கு ஒரு வலுவான சான்றாகவே, தளபதி விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படம் இளைஞர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய மிகப்பெரிய நேர்மறையான தாக்கத்தைச் சுட்டிக்காட்டி அவர் தனது பேச்சை தொடங்கினார்.
ஆர்.கே.பேட்டையில் நிகழ்ந்த புரட்சி
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை பகுதியில் சுமார் 150 இளைஞர்கள் துப்பாக்கி படத்தைப் பார்த்ததன் மூலம் தீவிர நாட்டுப்பற்று பெற்று இந்திய ராணுவத்தில் இணைந்த வரலாற்று நிகழ்வை அவர் அவையில் பதிவு செய்தார். அங்கு ராணுவத்தில் சேர்ந்த பல இளைஞர்கள் தன்னிடம் நேரில் பேசும்போது, "அண்ணா, நாங்கள் பொறியியல் பட்டப்படிப்புகளான பி.இ மற்றும் எம்.இ போன்ற உயர்கல்விகளை முடித்திருந்தோம். அதிக ஊதியம் தரும் தனியார் வேலைகளைப் பற்றி யோசிக்காமல், அண்ணன் விஜய்யின் துப்பாக்கி படத்தைப் பார்த்ததும் தாய் நாட்டுக்காக எல்லைக்குச் சென்று தேச சேவை செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. அதனால் தான் படிப்பையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு ராணுவத்தில் சேர்ந்தோம்" என்று பெருமையுடன் கூறியதை நினைவுகூர்ந்தார்.
அஞ்சலியும் குடும்பத்தினருக்கு உதவியும்
ஆர்.கே.பேட்டையிலிருந்து ராணுவத்திற்குச் சென்று தாய்நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களில் சிலர், தேசப் பணியின்போது தங்களின் இன்னுயிரை ஈந்து தியாகிகளாகத் தாய்மண்ணுக்குத் திரும்பிய வேதனையான தருணத்தையும் விஜயகுமார் பகிர்ந்துகொண்டார். அந்த வீரர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு வந்தபோது, தவெக தலைவர் தளபதி விஜய்யின் நேரடி வழிகாட்டுதலின்படியும், கட்சியின் பொதுச் செயலாளரின் அறிவுறுத்தலின்படியும் தாங்கள் நேரில் சென்று தியாகிகளுக்கு உரிய அரசு மற்றும் கட்சி மரியாதையைச் செலுத்தியதாகவும், அவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறித் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் " சினிமா என்பது சில மணி நேரங்கள் பார்த்துவிட்டு மறந்து கடந்து செல்லும் பொழுதுபோக்கு சாதனம் மட்டுமல்ல, அது ஒரு சமூகத்தில் மிகப்பெரிய புரட்சியையும் நேர்மறை மாற்றங்களையும் உருவாக்கும் வல்லமை கொண்டது என்பதற்கு இந்த நிகழ்வே வாழும் சாட்சி என்று அவர் அழுத்தமாகக் கூறினார்.
குறிப்பாக இந்தியத் திருநாட்டின் பாதுகாப்புப் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள எண்ணற்ற இளைஞர்களுக்கு வழிகாட்டியாக அமைந்த ஒரு படமாகத் 'துப்பாக்கி' திகழ்கிறது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், சினிமாவையும் அதை நம்பி அரசியலுக்கு வருபவர்களையும் யாரும் எளிதாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது என்பதைச் சட்டப்பேரவையில் பதிவு, பதிவு, பதிவு செய்கிறேன் என்று ஆணித்தரமாக முழங்கி தனது உரையை நிறைவு செய்தார்.
