சென்னை :தமிழ்நாட்டில் அக்டோபர் 16-ம் தேதி தொடங்கி 96 நாட்கள் நீடித்த வடகிழக்கு பருவமழை இன்று (ஜனவரி 19) முழுமையாக நிறைவு பெற்றது. இந்தப் பருவத்தில் மூன்று புயல்கள் வங்ககடலில் உருவாகி, குறிப்பிடத்தக்க அளவு மழைப்பொழிவை ஏற்படுத்தின. இதனால் தமிழகம் முழுவதும் குளிர்கால பருவமழை இயல்பை விட மிக அதிகமாக பதிவாகியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழ்நாடு முழுவதும் குளிர்கால பருவமழை (வடகிழக்கு பருவமழை) இயல்பை விட 156% கூடுதலாக பெய்துள்ளது. இது கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழைப்பொழிவாகும். இதனால் விவசாயம், நீர்நிலைகள், மின்சார உற்பத்தி ஆகியவை கணிசமாக பயனடைந்துள்ளன.சென்னை நகரில் மட்டும் குளிர்கால பருவமழை இயல்பை விட 7% கூடுதலாக பதிவாகியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சில இடங்களில் வெள்ளப்பெருக்கு, சாலை தண்ணீர் தேங்குதல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. இருப்பினும், ஒட்டுமொத்தமாக மழை தமிழகத்திற்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.வடகிழக்கு பருவமழை நிறைவடைந்ததால், தற்போது தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவுகிறது. வானிலை மையம் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை தொடரும் என்று கூறியுள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து இன்று (19-01-2026) விலகியது.19-01-2026 முதல் 21-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
22-01-2026 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 23-01-2026 முதல் 25-01-2026 வரை: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரையில், இன்று (19-01-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21″ செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (20-01-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
