200% வெற்றி...நானும் இனி மதுரைக்காரன்தான் - சுந்தர் சி ஸ்பீச்!

மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் சுந்தர் சி வேட்புமனு தாக்கல் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் சுந்தர் சி. மனைவி குஷ்பு உடன் வந்து மனு தாக்கல் செய்தார்.

Hero Image

மதுரை : மத்திய சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த புதிய நீதிக் கட்சி வேட்பாளர் சுந்தர் சி, செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். வேட்புமனு தாக்கல் செய்த பிறகு பேசிய சுந்தர் சி, “வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். இங்கு வந்ததிலிருந்து மக்கள் எனக்குக் கொடுக்கும் வரவேற்பும், ரெட்டை இலைக்கு கொடுக்கும் ஆதரவும் பார்க்கும்போது, வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்துவிட்டது” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், “மதுரை மத்திய தொகுதி மக்கள் என்னை வெற்றி வேட்பாளராக ரெட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, ஒரு MLA-வாக ஆக்கி, எடப்பாடியார் தலைமையிலான ஆட்சி அமைய உறுதுணையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு பரிபூரணமாக உள்ளது” என்று கூறினார்.பிரச்சாரம் குறித்து பேசிய சுந்தர் சி, “பிரச்சாரம் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. நாளை முழுவீச்சில் தொடங்குகிறோம். நாளை செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்கள், செயல் வீரர்கள், நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்வார்கள். அந்தக் கூட்டம் முடிந்ததும் பிரச்சாரம் முழு வீச்சில் தொடங்கும்” என்றார்.

வெற்றி வாய்ப்பு பற்றி கேள்விக்கு பதிலளித்த அவர், “வெற்றி வாய்ப்பு நூற்றுக்கு இருநூறு சதவீதம் உள்ளது. பிரமாதமான வெற்றி வாய்ப்பு. ஏனென்றால், நான் வந்ததிலிருந்து மக்களின் வரவேற்பு அபாரமாக உள்ளது” என்று தெரிவித்தார்.மதுரையின் அடிப்படை பிரச்சனைகளை சுட்டிக்காட்டிய சுந்தர் சி, “பத்து வருஷமாக ஒரே MLA இருந்தும் எந்த நலத்திட்டங்களும் செய்யப்படவில்லை. மக்கள் அடிப்படை விஷயங்களைத்தான் கேட்கிறார்கள் – நல்ல சுகாதாரம், குடிநீர், சாலைகள், கழிவுநீர் பிரச்சனை இல்லாதது, நல்ல கழிப்பறைகள் போன்ற அடிப்படை தேவைகளைக்கூட இந்த அரசு நிறைவேற்றவில்லை. போக்குவரத்து இடையூறு, மேம்பாலங்கள் இல்லாதது, மாநகராட்சி ஊழல் என எல்லா இடங்களிலும் பிரச்சனைகள் நிலவுகின்றன” என்று விமர்சித்தார்.

மதுரையின் பெருமையை நினைவுகூர்ந்த அவர், “மதுரை தமிழர்களின் தலைநகரம். இது கோயில் நகரம் மட்டுமல்ல, தங்க நகரம். இழந்த பெருமையை மீட்டெடுக்க வேண்டும். அதற்கு எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். அதற்கு மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நான் வெற்றி பெற வேண்டும்” என்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

தன்னை “வெளியூர்க்காரன்” என்று சொல்வதற்கு பதிலளித்த சுந்தர் சி, “இனிமேல் நான் மதுரைக்காரன். இங்கு வீடு பார்த்துவிட்டேன். இங்குதான் குடியிருக்கப் போகிறேன். மாதத்தில் பதினைந்து நாள் இங்குதான் இருப்பேன். என் பூர்வீகம் பழனி, அம்மாவின் பூர்வீகம் திருச்சி, பிறந்தது ஈரோடு, வளர்ந்தது கோயம்புத்தூர், பொழப்பு நடத்தியது சென்னை. இப்போது வந்திருப்பது மதுரை. எனவே தமிழ்நாடுதான் என் ஊர். மதுரை என் ஊர்” என்று உணர்ச்சிபூர்வமாகக் கூறினார்.இறுதியாக, “எங்களோட என்டிஏ கூட்டணிக்கு அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கு வெற்றிக் களத்தை காணப் போகிறோம்” என்று நம்பிக்கையுடன் பேட்டியை நிறைவு செய்தார்.