சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து எழும் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் " கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக 505 வாக்குறுதிகளை அறிவித்திருந்தது. இதில் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கனிமொழி தெரிவித்தார். மீதமுள்ள 101 வாக்குறுதிகளில், 37 வாக்குறுதிகள் மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உள்ளது என்றும், 64 வாக்குறுதிகள் உள்ளூர் மக்களின் எதிர்ப்பு அல்லது பிற காரணங்களால் நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளன என்றும் அவர் விளக்கினார்.
இதனைத் தவிர, தேர்தல் அறிக்கையில் இடம்பெறாத பல புதிய திட்டங்களையும் திமுக அரசு நிறைவேற்றியுள்ளதாக கனிமொழி சுட்டிக்காட்டினார். காலை உணவுத் திட்டம், வீடு தேடி மருத்துவம், தமிழ் புதல்வன், புதுமைப் பெண், நான் முதல்வன், பசுமை தமிழ்நாடு இயக்கம், தாய் மாணவர் திட்டம், அன்புகரங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம், என் மகளிர் பெயரில் சொத்து பதிவு செய்யும் போது முத்திரைத் தாள் கட்டணம் குறைப்பு உள்ளிட்ட பல திட்டங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் இல்லாத போதும் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள 2026 தேர்தல் அறிக்கை குறித்து பேசிய கனிமொழி, “இந்த அறிக்கை பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 80,000 கருத்துக்கள், மனுக்கள், மின்னஞ்சல், வாட்ஸ்அப், குறுஞ்செய்திகள் மூலம் பெறப்பட்டன. AI தொழில்நுட்பம் மூலமும் மக்களின் கோரிக்கைகள் சேகரிக்கப்பட்டன.
ஒவ்வொரு துறையிலும் உள்ள நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே இந்த அறிக்கையில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாகக் கூறியிருந்தார்” என்றார்.
அதனைத்தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் திமுகவின் வாக்குறுதி நிறைவேற்றம் குறித்து எழுப்பும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த கனிமொழி, “நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியுள்ளோம். மீதமுள்ளவற்றில் சில மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாததாலும், சில மக்களின் எதிர்ப்பு காரணமாகவும் நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், வாக்குறுதிகளுக்கு அப்பால் பல புதிய மக்கள் நலத் திட்டங்களை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம்” என்று தெளிவுபடுத்தினார்.
