சென்னை :தமிழ்நாடு அரசு மாணவர்களின் கல்வி மற்றும் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. “உலகம் உங்கள் கையில்” என்ற திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் இந்த லேப்டாப் வசதியைப் பெற உள்ளனர்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திட்டத்தை தொடங்க வைக்கவிருக்கிறார். மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படுவதன் மூலம் கல்வி மட்டுமின்றி தொழில்நுட்ப அறிவும் வளர வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக இருந்து வருகிறது .
இந்நிலையில், இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் லேப்டாப்புகளில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் இருக்கிறது என்பதை பற்றி தற்போது பார்க்கலாம். அதன்படி, Intel Core i3 அல்லது AMD Ryzen 3 வகை செயலி (Processor) வழங்கப்படுகிறது. மேலும் 8 GB RAM மற்றும் 256 GB SSD சேமிப்பு வசதி கொண்டதாக லேப்டாப் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆன்லைன் வகுப்புகள், ப்ராஜெக்ட் வேலைகள், மென்பொருள் பயன்பாடு போன்றவை சீராக செயல்படும் வகையில் அமைந்துள்ளது.
இலவச லேப்டாப்புகளில் Windows 11 Home மற்றும் BOSS Linux ஆகிய இரண்டும் சேர்த்து (Dual Boot) வழங்கப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். மேலும் 15.6 இன்ச் Full HD திரை வழங்கப்படுவதால் நீண்ட நேரம் படிக்கும் மாணவர்களுக்கு கண் சோர்வு குறையும் வகையில் உள்ளது. Dell, HP, Acer போன்ற தரமான நிறுவனங்களின் லேப்டாப்புகள் வழங்கப்பட உள்ளன. இதனுடன் கூடுதல் சலுகையாக Microsoft Office 365 (1 வருட சந்தா), Perplexity Pro AI (6 மாத சந்தா) மற்றும் தரமான லேப்டாப் பை ஆகியவையும் வழங்கப்படுகின்றன. கணினித் திறன், டிஜிட்டல் அறிவு, AI பயன்பாடு போன்றவற்றில் மாணவர்களை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Dual Boot என்றால் என்ன?
தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச லேப்டாப்புகளில் “Dual Boot” என்ற சிறப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. Dual Boot என்றால், ஒரே லேப்டாப்பில் இரண்டு Operating System-களை நிறுவி பயன்படுத்த முடியும் என்பதாகும். இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு Windows 11 Home மற்றும் BOSS Linux ஆகிய இரண்டு மென்பொருள்களும் ஒரே லேப்டாப்பில் வழங்கப்படுகின்றன.
Windows மற்றும் Linux இடையிலான வித்தியாசம்
லேப்டாப் ஆன் செய்யும் போது, மாணவர்கள் எந்த Operating System பயன்படுத்த வேண்டும் என்பதைத் தேர்வு செய்யும் வசதி வழங்கப்படுகிறது. Windows 11 பொதுவான கல்வி வேலைகள், Office பயன்பாடு, ப்ராஜெக்ட், பிரசென்டேஷன் போன்றவற்றுக்கு எளிதாக பயன்படும். BOSS Linux என்பது இந்திய அரசு உருவாக்கிய பாதுகாப்பான மென்பொருளாகும்; இது கணினி அறிவு, தொழில்நுட்ப கற்றல் மற்றும் வைரஸ் பாதுகாப்புக்கு உதவுகிறது.
மாணவர்களுக்கு கிடைக்கும் பயன்
Dual Boot வசதியால் மாணவர்கள் தங்களின் தேவைக்கேற்ப Operating System-ஐ தேர்வு செய்து பயன்படுத்த முடியும். சாதாரண கல்வி மற்றும் கல்லூரி பணிகளுக்கு Windows-ஐ பயன்படுத்தலாம்; அதே நேரத்தில் தொழில்நுட்ப அறிவை வளர்க்க Linux-ஐ முயற்சி செய்யும் வாய்ப்பும் கிடைக்கிறது. இதன் மூலம் மாணவர்களின் டிஜிட்டல் திறன் மற்றும் கணினி பயன்பாட்டு அறிவு மேம்படும் என கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
