"தவெக ஆட்சிக்கு வந்தவுடன் கிட்னி திருட்டுக்கு நடவடிக்கை" – தவெக தலைவர் விஜய் உறுதி.!

திமுக எம்எல்ஏவுக்கு சொந்தமான மருத்துவமனையில் நடைபெற்ற கிட்னி திருட்டு, அதில் விசைத்தறியில் பணிபுரியும் ஏழைப் பெண்களை குறி வைத்து கிட்னி திருட்டு நடந்துள்ளது என்று தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.

TVKVijay

நாமக்கல் :நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி திருட்டு பிரச்சினை குறித்து தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய் தனது பரப்புரையில் கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று (செப்டம்பர் 27) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தல் பரப்புரையில், விஜய் இந்த விவகாரத்தை எழுப்பி, திமுக அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

குறிப்பாக, நாமக்கலில் திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடந்ததாகவும், இதற்கு காரணம் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தவறிய திமுக அரசு என்றும் அவர் குற்றம்சாட்டினார். வறுமையால் கந்து வட்டிக்கு கடன் வாங்கியவர்கள் கிட்னி விற்க நிர்பந்திக்கப்பட்டதாகவும், இது பெரும் கொடுமை என்றும் விஜய் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய த.வெ.க தலைவர் விஜய், ” கிட்னி திருட்டால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் நாமக்கல். கந்துவட்டி கொடுமையே கிட்னி திருட்டுக்கு காரணம். த.வெ.க ஆட்சி அமைந்ததும் கிட்னி திருடர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக – பாஜக கூட்டணி மீது மக்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை.

திமுகவிற்கு மக்கள் வாக்களிப்பது, பாஜகவிற்கு வாக்களிப்பதற்கு சமம். ஏழை விசைத்தறி தொழிலாளர்களை குறிவைத்து கிட்னி திருட்டு நடைபெறுகிறது. கந்துவட்டி கொடுமை தான் கிட்னி திருட்டின் ஆரம்பமே. திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு – நாமக்கல்லைச் சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிட்னி திருட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் த.வெ.க. ஆட்சியில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், தவெக ஆட்சி அமைந்தவுடன் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள்” என்று உறுதியுடன் கூறியுள்ளார்.