கோவை : மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து அமைச்சர் சம்பத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருத்தம் தெரிவித்ததுடன் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரப்படும் என கூறியுள்ளார். . மேலும், இதுபோன்ற குற்றங்கள் மீண்டும் நடக்காத வகையில் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சம்பத்குமார், “இந்த மாதிரி சம்பவம் இதுவே இறுதியாக இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. குற்றச் செயல்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கே பயம் வர வேண்டும். இனிமேல் இத்தகைய குற்றங்களை செய்யும் எண்ணமே வரக்கூடாத அளவுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்படும் என்பது முதலமைச்சரின் எண்ணமாக உள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத்தருவது எங்களின் கடமை” என்று தெரிவித்தார்.
மேலும், இந்த சம்பவம் நடந்த நேரம் குறித்து அதிர்ச்சி தகவல்களையும் அவர் பகிர்ந்தார். “எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, சிறுமி காணாமல் போன ஒரு மணி நேரத்துக்குள்ளேயே இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம். ஆனால் போலீசில் புகார் இரவு 8 அல்லது 9 மணிக்குத்தான் வந்துள்ளது” என்று கூறினார்.
அமைச்சர் மேலும் பேசுகையில், “இந்த சம்பவம் நடந்த பகுதியில் ஏற்கனவே பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து புகார் அளிக்கப்பட்டிருந்தது. சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே அந்த பகுதியில் பாதுகாப்பு வசதிகள் தேவை என்று ஒரு கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார் அளித்திருந்ததாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்றார்.
குறிப்பாக, சிறுமியின் உடல் மீட்கப்பட்ட குளப்பகுதியில் பாதுகாப்பு சுவர் கூட இல்லாமல் இருந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். “அந்த பகுதியில் உள்ள குட்டைக்கு செல்லும் சாலையில் எந்த தடுப்புச்சுவரும் இல்லை. அதற்கான பணிகளை உடனடியாக தொடங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன” என்றும் தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “கோவை மட்டும் அல்ல, தமிழ்நாடு முழுவதும் ‘சிங்கப்பெண் படை’ திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது” என்று கூறினார்.
“இந்த திட்டம் வரும் 27ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கண்காணிப்பு வலுப்படுத்தப்படும்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், “RTO மற்றும் காவல்துறை இணைந்து விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்” என்றும் அவர் கூறினார். கோவை சிறுமி கொலை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவத்திற்கு பிறகு அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
