சென்னை :துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு அளித்த புத்தாண்டு நேர்காணலில் தமிழக அரசியல் நிலவரம் குறித்து விரிவாகப் பேசினார். “தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிரான பலமான கட்சியே இல்லை. வரலாற்று ரீதியாகப் பார்த்தால் அதிமுகவைத்தான் முதன்மை எதிர்க்கட்சியாகப் பார்க்கிறோம். அதிமுக இப்போது பலவீனமாக இருந்தாலும், திமுகவின் எதிர்க்கட்சியாக அதிமுகவை மட்டுமே கருதுகிறோம்” என்று தெளிவாகத் தெரிவித்தார்.
தவெக தலைவர் விஜய் “2026 தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி” என்று அறிவித்திருக்கும் நிலையில், உதயநிதி அதை நேரடியாகக் குறிப்பிடாமல் அதிமுகவை மட்டும் எதிர்க்கட்சியாகக் குறிப்பிட்டது கவனம் பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறிய உதயநிதி, “திமுக கூட்டணி அனைத்து கட்சிகளின் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு செயல்படும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜனநாயகத்தின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர். அனைத்து கூட்டணிக் கட்சிகளையும் ஒருங்கிணைத்துச் செல்லும் பக்குவம் அவருக்கு உண்டு” என்று பாராட்டினார்.
NDA கூட்டணியை விமர்சித்த உதயநிதி, “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முடிவுகளை டெல்லி தலைமை எடுத்துவிட்டு, அதை அதிமுக மீது திணிக்கிறது. திமுக கூட்டணி அப்படிக் கிடையாது. எங்கள் முடிவுகள் அனைவரும் கூடி எடுப்பது” என்று பகடி செய்தார். பாஜகவையும் அதன் “B டீம்” என்று குறிப்பிட்டு விமர்சித்த அவர், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பாஜக மற்றும் அதன் B டீமை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று உறுதிப்படக் கூறினார்.
உதயநிதியின் இந்தப் பேட்டி 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. திமுகவுக்கு வலுவான எதிரியே இல்லை என்ற அவரது கருத்து, அதிமுகவையும் தவெகவையும் நேரடியாக சவால் விடுவதாக அமைந்துள்ளது. அதிமுக தரப்பில் இதற்கு இதுவரை பதில் இல்லை.
