அமுல் பால் விலை ரூ.2 உயர்வு.., இன்று முதல் அமல்.!
நாடு முழுவதும் இன்று முதல் தமிழ் அமுல் நிறுவனத்தின் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை : இந்தியாவின் பிரபல பால் பிராண்ட்டாக திகழும் அமுல் தனது பால் விலையை உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு மே ஒன்றாம் தேதியான இன்று முதல் அமலுக்கு வந்திருக்கிறது. அதாவது, அமுல் நிறுவன பாலின் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்ந்துள்ளதாக குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது பொதுமக்களுக்கு சற்று சுமையாக மாறியுள்ளது. அதன்படி, Amul Gold, Slim & Trim, Standard 2 உள்ளிட்ட விலையை லிட்டருக்கு ரூ.2 அமுல் நிறுவனம் உயர்த்தியது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பால் விலை அதிகரிக்கவில்லை எனச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று(மே 1) முதல் 500 மில்லி லிட்டர் அமுல் கோல்டு பால் பாக்கெட் ரூ.34-க்கும், 1 லிட்டர் பால் பாக்கெட் ரூ.67-க்கும் விற்பனை செய்யப்படும்.
அமுலைத் தவிர, மதர் டெய்ரியும் அதன் புதிய விலைகளை வெளியிட்டுள்ளது. முன்னதாக, மதர் டெய்ரியின் அல்ட்ரா பிரீமியம் ஃபுல் க்ரீம் பால் லிட்டருக்கு ரூ.76 ஆக இருந்தது. தற்போது அது லிட்டருக்கு ரூ.78 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் மதர் டெய்ரியின் முழு கிரீம் பால் இப்போது லிட்டருக்கு ரூ.70 ஆக உயர்ந்துள்ளது.
அதன் டோன்ட் பால் முன்பு லிட்டருக்கு ரூ.56 ஆக இருந்தது. இப்போது அது லிட்டருக்கு ரூ.58 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், மதர் டெய்ரியின் இரட்டை டோன் பால் இப்போது லிட்டருக்கு ரூ.51 ஆக உயர்ந்துள்ளது. இது முன்பு ரூ.49 ஆக இருந்தது.