அண்ணாமலை vs தாக்கரே ஆதரவாளர்கள் ! மும்பையில் நடந்தது என்ன?

அண்ணாமலை மும்பைக்கு வந்தால் காலை வெட்டுவோம் என்று சமூக வலைத்தள பக்கத்தில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Thackeray annamalai

மகாராஷ்டிரா :மாநிலத்தில் மும்பை உட்பட பல மாநகராட்சிகளுக்கான தேர்தல் நாளை (ஜனவரி 15) நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்தது. தேர்தல் நடைபெறும் இந்தக் காலகட்டத்தில் மும்பை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் மது அருந்தும் கடைகள், பீர் பார்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.தேர்தல் பிரசாரத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தீவிரமாக ஈடுபட்டார்.

அவர் பேசும்போது, “மும்பை என்பது மராட்டிய மாநிலத்தின் ஒரு நகரம் மட்டுமல்ல; அது சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நகரம்” என்று குறிப்பிட்டார். இந்தக் கருத்து மராத்தி உணர்வு கொண்ட தாக்கரே குடும்பத்தினரை கோபமடையச் செய்தது.உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத், அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கோரிக்கை விடுத்தார். உத்தவ் தாக்கரேயின் சகோதரர் ராஜ் தாக்கரேயும் அண்ணாமலையை கடுமையாக சாடினார்.

பிரசாரத்தில் பேசிய ராஜ் தாக்கரே, “தமிழ்நாட்டில் இருந்து ஒரு ரசமலாய் வந்துள்ளது. உங்களுக்கும் மும்பைக்கும் என்ன சம்பந்தம்? ஹடாவோ லுங்கி பஜாவோ புங்கி” என்று கூறினார். இது 1960-70களில் பால் தாக்கரே பயன்படுத்திய அதே வாசகம்.அண்ணாமலைக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. சமூக வலைதளங்களில் “மும்பைக்கு வந்தால் காலை வெட்டுவோம்” என்ற மிரட்டல்களும் பரவின.

இதனால் இரண்டு நாட்களாக தாக்கரே சகோதரர்கள் தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலையை மையமாக வைத்து பேசி வருகின்றனர்.ஆனால், மும்பை பாஜக தரப்பில் அண்ணாமலையின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. “மும்பை சர்வதேச நகரம் என்று கூறியது தவறில்லை” என்று பாஜகவினர் விளக்கம் அளித்துள்ளனர். இதனால் மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கூட்டணி அமைத்துள்ளனர். இதனால் மும்பை, தானே போன்ற நகரங்களில் அவர்கள் ஒன்றாக பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பிரசாரம் செய்து வருகின்றனர். இருவரும் மராத்தி உணர்வை முன்வைத்து தேர்தலை சந்திக்கின்றனர். இதனால் காங்கிரஸ் கட்சி உத்தவ் தாக்கரே கூட்டணியில் இருந்து விலகி, மும்பையில் தனித்து போட்டியிடுகிறது. இந்த நிலவரம் தேர்தல் களத்தை இன்னும் சூடுபிடிக்கச் செய்துள்ளது.