சென்னை : தமிழ்நாட்டில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகையாக வழங்கப்படும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய உரிய கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், மே 2026 மாதத்திற்கான உரிமைத் தொகையை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் விரைவில் நேரடியாக வரவு வைக்க உத்தரவிட்டுள்ளார்.
முந்தைய அரசால் செயல்படுத்தப்பட்டு வந்த இந்த முக்கிய திட்டத்தை தொடர்வதுடன், அதை மேலும் சிறப்பாகவும், பலனளிக்கும் வகையிலும் மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு சில கால அவகாசம் தேவைப்படுகிறது என்பது தவெக அரசின் நிலைப்பாடாகும்.
இந்தச் சூழலில், மே மாதத்திற்கான உரிமைத் தொகையை எந்தத் தாமதமும் இன்றி பயனாளிகளுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.ஒரு கோடியே முப்பத்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கு மாதந்தோறும் உதவியாக வரும் இந்த ரூ.1,000 தொகை, ஏராளமான குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது.
புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், அரசு கொண்டு வந்த நலத்திட்டங்கள் தொடரும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் ஏற்கனவே உறுதியளித்திருந்தார். அதே சமயம், த.வெ.க ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத்தொகை 1000 லிருந்து 2,500 ஆக வழங்கப்படும் என விஜய் தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருந்தார். எனவே, 2,500 உயர்த்தி வழங்கப்படுவதற்கான மறுசீரமைப்பு செய்யப்பட்டவுடன் 2,500 வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சரின் இந்த உத்தரவு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மீது பயனாளிகளுக்கு ஏற்பட்டிருந்த அச்சத்தை நீக்கியுள்ளது. விரைவில் மே மாதத் தொகை வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
