அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய பொங்கல் பரிசு...மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

cm mk stalin

சென்னை :தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டுகாலக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை உறுதி செய்யும் ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ (Tamil Nadu Assured Pension Scheme – TAPS) அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை புத்தாண்டு மற்றும் பொங்கல் பரிசாக அரசு ஊழியர்களுக்கு வழங்கியுள்ளதாகக் கூறிய அவர், “நம்பி வாக்களித்த மக்களுக்கு திமுக அரசு எப்போதுமே உண்மையாக இருக்கும் என மீண்டும் ஒருமுறை செய்து காட்டியுள்ளோம்” என்று பெருமிதம் தெரிவித்தார்.

TAPS திட்டத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது கடைசி மாத ஊதியத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படும். ஓய்வூதியதாரர் இறந்தால் குடும்ப உறுப்பினர்களுக்கு 60% குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். தகுதி பணிக்காலம் 10 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. தகுதி பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் ஓய்வு பெறுபவர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.

ஓய்வு பெறும்போது ரூ.25 லட்சம் வரை பணிக்கொடை வழங்கப்படும்.இந்தத் திட்டம் 2004-ல் அறிமுகமான புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு (CPS) மாற்றாக அமல்படுத்தப்படுகிறது. CPS திட்டத்தில் ஓய்வூதிய உறுதி இல்லாத நிலை இருந்தது. அதைத் தீர்க்கும் வகையில் TAPS கொண்டு வரப்பட்டுள்ளது. “திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும். தமிழ்நாட்டின் நிதிநிலை சீரடையச் சீரடைய அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளும் நீங்கள் கேட்காமலே நிறைவேறும்” என்று முதலமைச்சர் உறுதியளித்தார்.

இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 20 ஆண்டுகாலக் கோரிக்கை நிறைவேறியதாக ஊழியர் சங்கங்கள் வரவேற்றுள்ளனர். திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதாகவும் இது பார்க்கப்படுகிறது. திராவிட மாடல் ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்களில் ஒன்றாக TAPS திட்டம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.