துபாய், ஆகஸ்ட் 16: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) நடத்தும் 2027-ஆம் ஆண்டிற்கான ஆண்களுக்கான ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை, மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2-ஆம் தேதி (காந்தி ஜெயந்தி) அன்று தொடங்க ஐசிசி திட்டமிட்டுள்ளது.
காந்தி ஜெயந்தி தினத்தில் தொடக்கம்
மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் 21 ஆண்டுகள் வசித்துப் பணியாற்றிய வரலாற்றுப் பின்னணியைக் கௌரவிக்கும் வகையில், ஆப்பிரிக்க மண்ணில் நடைபெறும் இந்த உலகக்கோப்பைத் தொடரை அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று தொடங்க ஐசிசி பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் உலகக்கோப்பையின் தொடக்க நாள் அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் நாளாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி அட்டவணை & இறுதிப்போட்டி
முன்னதாக அக்டோபர் 8-ஆம் தேதி உலகக்கோப்பையைத் தொடங்க முதற்கட்டமாகத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அக்டோபர் 2-க்கே போட்டிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்தொடரின் இறுதிப்போட்டி 2027 நவம்பர் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதன் மூலம் சுமார் 50 நாட்கள் 14 அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பைப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இணைந்து நடத்தும் 3 ஆப்பிரிக்க நாடுகள்
2027 ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரை தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்துகின்றன. மொத்தம் 12 மைதானங்களில் போட்டிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன.
