சென்னை: திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் கலாநிதி வீராசாமி ஆகியோர், மதுரை மற்றும் கோயம்புத்தூர் மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்திருப்பதைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். தமிழச்சி தங்கபாண்டியன் கூறுகையில்,“2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 20 லட்சத்தை எட்டவில்லை என்று காரணம் காட்டி, கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு பாஜக அரசு அனுமதி வழங்கவில்லை. ஆனால், மக்கள் தொகை இன்னும் குறைவாக உள்ள ஆக்ரா (15.8 லட்சம்), பாட்னா (16.8 லட்சம்), போபால் (17.9 லட்சம்) போன்ற நகரங்களுக்கு மெட்ரோ ரயில் அனுமதி வழங்கியுள்ளது.
இது தெளிவான இரட்டை நிலைப்பாட்டை (double standard) வெளிப்படுத்துகிறது” என்றார்.மேலும், மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்ட பிற மாநில பாஜக தலைவர்கள் தமிழ்நாடு வந்து மெட்ரோ திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளிப்பது மக்களை ஏமாற்றும் செயல் என்றும் இருவரும் கூட்டாகக் கண்டனம் தெரிவித்தனர்.
தமிழச்சி தங்கபாண்டியன் விரிவாக விளக்குகையில்,“இங்கு ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் உள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் பதவி ஏற்ற முதல் நாளிலிருந்து மதுரை மெட்ரோ திட்டத்திற்காக தொடர்ச்சியாக உழைத்து வருகிறார். மே 7, 2021-ல் மதுரை மெட்ரோ திட்டத்தை உடனடியாக மீண்டும் தொடங்குவதாக அறிவித்தார்.
பிப்ரவரி 20, 2023-ல் சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
மார்ச் 27, 2023-ல் விரிவான திட்ட அறிக்கை (DPR) ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
பிப்ரவரி 29, 2024-ல் DPR அதிகாரப்பூர்வமாக மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
திட்டச் செலவு ரூ.11,368 கோடி. மாநிலப் பங்கு 100% நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இத்தனை நடவடிக்கைகளையும் மாநில அரசு முழு பொறுப்புடன் மேற்கொண்டுள்ளது. இவை அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, ‘நாங்கள் வந்தால் செய்வோம்’ என்று சொல்வது அப்பட்டமான மிரட்டல் (blackmail) ஆகும்” என்று கூறினார்.அவர் மேலும் கூறியதாவது:“மத்திய அரசு நவம்பர் 18, 2025 அன்று மதுரை மற்றும் கோவை DPR-களை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு திருப்பி அனுப்பியது.
ஆனால் மக்கள் தொகை குறைவான வட இந்திய நகரங்களுக்கு அனுமதி அளித்து கட்டுமானப் பணிகளைத் தொடங்கியுள்ளது. இது தமிழ்நாட்டுக்கு எதிரான துரோகமாகும். இந்த இரட்டை நிலைப்பாட்டின் பின்னணியில் தான் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் தமிழ்நாடு வந்து வாக்குறுதிகளை அளிக்கிறார்.
இது தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் இடையிலான தேர்தல். ‘இந்தியா vs INDIA’ அல்ல... இது டெல்லி vs தமிழ்நாடு என்று முதலமைச்சர் தெளிவாகக் கூறியுள்ளார். இதற்கு சிறந்த உதாரணம் பட்னவிஸ் அவர்களின் வருகையும் வாக்குறுதிகளும்” என்றார்.திமுக எம்.பி.க்களின் இந்த கூட்டுக் கண்டனம், மத்திய அரசின் இரட்டை நிலைப்பாட்டை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது.
