செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரம் : துரைமுருகன் பேச்சால் செல்வப்பெருந்தகை வருத்தம்!

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து மக்கள் பிரதிநிதிக்கு சொல்வது கட்டாயமில்லையா? என செல்வப்பெருந்தகை கேள்விகளை முன் வைத்துள்ளார்.

selvaperunthagai vs durai murugan

ராணிப்பேட்டை :மாவட்டத்தின் சிப்காட் பகுதியில், மாவட்ட குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை மற்றும் தொழில் சங்கத்தின் சார்பில் பிரம்மாண்டமான வர்த்தக கண்காட்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியின் தொடக்க விழாவில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, நிகழ்ச்சியைப் பிரமாண்டமாகத் தொடங்கி வைத்தார்.

இந்தக் கண்காட்சியில் 130க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதில் சிறு மற்றும் குறு தொழில் முன்னோடிகளுக்கான முதலீட்டு மையங்கள், விற்பனை அரங்குகள் மற்றும் பல்வேறு அறிமுகங்கள் நடைபெறுகின்றன. இந்த நிகழ்ச்சி, தமிழகத்தில் சிறு தொழில்களின் வளர்ச்சிக்கு ஒரு பெரிய தளமாக அமைந்துள்ளது.நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன், ராணிப்பேட்டை மாவட்டம் சிறு மற்றும் குறு தொழில் பேட்டையாக (MSME Hub) மாறி வருவதாகப் பாராட்டினார்.

அப்போது, சிறப்பு வாக்காளர் பட்டியல் தொடங்குவது குறித்த கேள்விக்கு, “தலைவரின் கருத்துதான் என் கருத்து” என்று துரைமுருகன் தெரிவித்தார்.  மேலும், அம.மு.க. தலைவர் டி.டி.வி. தினகரனை “துரோகத்தின் நச்சு செடி” என்று விமர்சித்த குறித்து, “டி.டி.வி. தினகரன் என்ன பெரிய கட்சிக்காரர்?” என்று கிண்டலடித்தார்.

அதனைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையின், செம்பரம்பாக்கம் ஏரி திறப்புக்கு யாரும் அழைக்கவில்லை என்ற கருத்துக்கு, “அப்படிப் பேசியதற்கு வருத்தமாக இருக்கிறேன். உண்மையைத் தெரிந்து பேச வேண்டும். பருவமழை தொடக்கத்தில் மேட்டூர் அணை நிரம்பினால் முதலமைச்சர் திறப்பார் எனவும், அது அனைவருக்கும் அழைப்பு. சிறிய விஷயங்களுக்காகப் பெரிய வார்த்தைகள் பேச தேவையில்லை. ஏரி திறப்புக்கு யாரையும் அழைக்க வேண்டிய அவசியமில்லை” என்று விமர்சித்தார்.

இது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இது குறித்து செல்வப்பெருந்தகை வருத்தம் தெரிவித்து பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் ” செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து மக்கள் பிரதிநிதிக்கு சொல்வது கட்டாயமில்லையா? திமுக கட்சியில் இருக்கும் மூத்த அமைச்சர், மாபெரும் கட்சியின் பொதுச் செயலர் இப்படி கேள்வி கேட்கலாமா? அமைச்சர் துரைமுருகனின் பேச்சு வருத்தம் அளிக்கிறது. நான் கேள்வி கேட்டது குற்றம் என அவர் நினைப்பது நியாயமா? வெள்ள பாதிப்பு ஏற்படும்போது மக்களுடன் இருப்பது அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள்தான்” எனவும் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, மேலும் அவர் பேசுகையில் ” பட்டியலினத்தவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் ஆட்சி திமுக ஆட்சி குறிப்பாக முதல்வர் இந்த விஷயத்தில் கண்ணும், கருத்துமாக இருக்கிறார் எனவும், துணை முதல்வரும் இரவும், பகல் பாராமல் வேலை செய்கிறார் ஆனால் ஒன்றிரண்டு அதிகாரிகள் செய்யும் தவறுகளைதான் சுட்டிக்காட்டுகிறோம். இந்த அதிகாரிகளால் ஆட்சியின் நற்பெயருக்கு களங்கம் வந்துவிடக் கூடாது என்ற வேதனை இருக்கிறது” எனவும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.