சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்! 

தனது தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்று நாளையுடன் 4 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு கட்சி தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Tamilnadu CM MK Stalin

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று 5வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை குறிப்பிடும் வகையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கி வருகிறோம். இந்தியாவின் கொள்கை ரீதியாக நமக்கு எதிரானவர்கள் ஆள்கின்ற மாநிலங்களில் கூட திராவிட மாடல் அரசின் திட்டங்களை பின்பற்றும் வகையில் முதன்மையான அரசாக தமிழ்நாட்டை இந்த நான்காண்டுகளில் உயர்த்தியிருக்கிறோம்.

அரசியல் எதிரிகளால் நமது ஆட்சியை குறை சொல்ல முடியாத காரணத்தால் அவதூறுகளை கூறுகிறார்கள். ஈரை பேனாக்கி, பேனை பேயாக காட்ட நினைக்கிறார்கள். அதிகார அமைப்புகளை ஏவி அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். இந்தப் பூச்சாண்டிகளுக்கு மிரள்வதற்கு அடிமைக் கட்சியல்ல, நாம் தி.மு.க.

“நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு” என்ற தலைப்பில் நமது அரசின் சாதனைகளை 868 ஒன்றியங்கள், 224 பகுதிகள், 152 நகரங்கள் என 1244 இடங்களில் 186 இளம் பேச்சாளர்கள் உள்ளிட்ட 443 கழகப் பேச்சாளர்கள் பங்கேற்கும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

கழக பேச்சாளர்கள் கண்ணியமாக பேச வேண்டும். கட்சி நிகழ்வுகளில் பேசுவதை மக்கள் கவனிக்கிறார்கள். அதனை சமூக வலைதளத்தில் அதிகமாக பகிர வேண்டும். இன்ஸ்டா ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ் ஆகியவை மூலம் பிரச்சாரங்களை அதிகரிக்க செய்ய வேண்டும்.

சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துத் தமிழ்நாட்டுக்கு துரோகமிழைப்பவர்களும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளும் தி.மு.க.வை வீழ்த்திவிட முடியாதா எனத் தொடர் தோல்வியின் ஆற்றாமையில் தவிக்கிறார்கள். அவர்களின் மனக்கணக்கு தப்புக்கணக்காகவே முடியும் என்பதை சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் போடுகிற கணக்கு தீர்மானிக்கும். நாம் மக்களிடம் செல்வோம். அவர்களுக்காக கழக அரசு செய்ததை சொல்வோம். தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அவற்றை எடுத்துரைப்போம் என திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்