கோவை மாணவி பாலியல் வழக்கு: 3 பேருமே குற்றவாளி வாழ்நாள் சிறை!

வழக்கில் கடந்த ஜனவரி 8ஆம் தேதி 270 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், விரைந்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

kovai

கோவை :சர்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி இரவு 20 வயது கல்லூரி மாணவி தனது 25 வயது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரே வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் ஆண் நண்பரை அரிவாளால் தாக்கிவிட்டு, மாணவியை இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. பெண்களின் பாதுகாப்பு குறித்து பெரும் கேள்விகள் எழுந்தன.

இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த சதீஷ் எனப்படும் கருப்பசாமி (30), காளி எனப்படும் காளீஸ்வரன் (21), மதுரை மாவட்டம் கருப்பாயூரணியைச் சேர்ந்த குணா எனப்படும் தவசி (20) ஆகிய மூவரையும் போலீசார் சுட்டுப் பிடித்தனர். கைது செய்யும் போது இவர்கள் போலீசாரை தாக்கி தப்ப முயன்றதால், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்தனர். இவர்கள் மீது IPC-யின் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு ஆரம்பத்தில் கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

பின்னர் மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அரசு தரப்பு விசாரணை நீதிபதி சுந்தரராஜன் முன்னிலையில் பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 112 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். மாணவி, அவரது ஆண் நண்பர், மாணவியின் தாய் உள்ளிட்டோர் முக்கிய சாட்சிகளாக ஆஜராகி சாட்சியம் அளித்தனர். 270 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை வெறும் 21 நாட்களில் முடிவடைந்தது. இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நீதிபதி இன்று (மார்ச் 7) தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார். இதற்காக கருப்பசாமி, காளீஸ்வரன், தவசி ஆகிய மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றம் மூவரையும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளது.குற்றம் நடந்து 4 மாதங்களுக்குள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தண்டனையாக வாழ்நாள் முழுவதும் 3 பேருக்கும் சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.