உருவானது 'சென்யார்' புயல்! தமிழகத்திற்கு பாதிப்பு இருக்குமா?

புதிய புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய 'சென்யார்’ என பெயரிடப்பட்டுள்ளது.

senyar cyclone

அந்தமான் அருகே மலாக்கா ஜலந்தி (Strait of Malacca) பகுதியில் தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையின்படி, இந்த அமைப்பு மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், பின்னர் 48 மணி நேரத்தில் தீவிரக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் (Depression to Deep Depression) வலுப்பெற வாய்ப்புள்ளது.

இந்தத் தாழ்வுப் பகுதி தற்போது 1006 hPa மத்திய அழுத்தத்துடன், 20-25 கிமீ/மணி காற்றுடன் உள்ளது, காற்றழுத்தம் 35 கிமீ/மணி வரை அதிகரிக்கலாம்.இந்த அமைப்பு அந்தமான்-நிகோபார் தீவுகளை நெருங்கி, பின்னர் வடக்கு-வடமேற்கு திசையில் தமிழ்நாடு, ஆந்திரா கடற்கரை பகுதிகளை நோக்கி நகரும் என்று IMD கணிப்பு. நவம்பர் 26 அன்று இது புயலாக (Cyclonic Storm) வலுப்பெற வாய்ப்புள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய ‘சென்யார்’ (Senyar – சிங்கள சொல்லில் ‘சிங்கம்’ என்று பொருள்) என்று பெயரிடப்படலாம். இந்த புயல் அந்தமான்-நிகோபார் தீவுகளில் நவம்பர் 25 முதல் 29 வரை கனமுதல் மிகக் கனமழைக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ‘சென்யார்’ புயலால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று IMD தெரிவித்துள்ளது. இருப்பினும், நவம்பர் 25 முதல் 27 வரை தமிழ்நாடு, கேரளா, மகே, லட்சத்தீவு, கடலோர ஆந்திரா, யானம், ராயலசீமா பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 28-30 வரை தமிழ்நாட்டில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மீனவர்கள் நவம்பர் 25 வரை அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடல் அலைகள் 2.5 மீ வரை உயரும்.IMD, தாழ்வு மண்டலம் வலுப்பெறும் போது 6 மணி நேரத்திற்கு ஒருமுறை அறிக்கை வெளியிடும். புயலாக மாறினால் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை புதுப்பிப்பு இருக்கும். இந்த அமைப்பு தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழையை மேலும் தீவிரப்படுத்தலாம், ஆனால் கரையைக் கடக்கும் இடம், வலுவு இன்னும் துல்லியமாகத் தெரியவில்லை. அடுத்த 48 மணி நேரத்தில் கூடுதல் தகவல்கள் வெளியாகும்.