சென்னை :அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை திடீரென சந்தித்தார். இந்தச் சந்திப்பில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர்கள் நத்தம் ஆர். விசுவநாதன், கே.பி. முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி. வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் பி. தங்கமணி, சி.வி. சண்முகம், டி. ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
சந்திப்பு முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி, திமுக ஆட்சியில் நடந்த ஊழல் தொடர்பான விவரங்களை ஆளுநரிடம் வழங்கியதாகத் தெரிவித்தார்.“கடந்த 56 மாதங்களாக கார்ப்ரேட் நிறுவனம் போல, அதிகார வர்க்கத்தின் உச்சத்தில் இருக்கும் திமுக குடும்பம் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து தமிழ்நாட்டை மிகப்பெரிய கடன் சுமையில் தள்ளியுள்ளது” என்று எடப்பாடி குற்றம்சாட்டினார்.
பத்திரப்பதிவுத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். ஊழல் செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பதால், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.“ஊழல் செய்வதைத் தவிர வேறு எதையும் மக்களுக்கு திமுக அரசு செய்யவில்லை” என்று கடுமையாக விமர்சித்த எடப்பாடி, 2021 முதல் திமுக ஆட்சியில் நடந்த ஊழல் தொடர்பான குற்றச்சாட்டு பட்டியலை ஆளுநரிடம் வழங்கியதாகக் கூறினார்.
இந்தச் சந்திப்பு திமுக ஆட்சிக்கு எதிரான அதிமுகவின் தொடர்ச்சியான அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது.ஆளுநருடனான சந்திப்பு முடிந்த பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசின் திட்டங்கள் மற்றும் நிர்வாகம் குறித்து ஆளுநருக்கு மனு வழங்கியது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அதிமுகவின் உத்தியாகவும் பார்க்கப்படுகிறது.
