இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் தர திமுக மறுத்துவிட்டது - சிபிஎம் முன்னாள் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன்!

அமையப்போகும் திமுக ஆட்சி எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறிதான் என சிபிஎம் முன்னாள் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் முக்கிய கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது“திராவிட முன்னேற்றக் கழக அரசு மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு எங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் அதே சமயத்தில், வருகிற காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் எப்படிப்பட்ட ஆட்சியை, எந்தக் கொள்கையை கடைபிடிக்கப் போகிறது என்பதை நிதானமாகப் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரத்தை தருவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் மறுத்துவிட்டது என்பதுதான் எதார்த்தமான உண்மை. கடந்த காலத்தில் இந்தத் தேர்தலில்கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் குறைந்தபட்சம் ஆறு இடங்களையாவது ஒதுக்கித் தர வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்திய போதும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை அதற்கு இடம் கொடுக்கவில்லை.இந்தத் தேர்தலில் இளைஞர்கள் மத்தியில் ஒரு பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது.

வழக்கமாகத் தேர்தல் நேரத்தில் இளைஞர்கள் வேறு எங்காவது இருப்பார்கள். ஆனால் இந்த முறை அப்படி இல்லை. தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் வேண்டும் என்கிற அரசியல் புரிந்துணர்வு இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. வாக்களிப்பது, ஒரு மாற்றத்தை நோக்கி நகர்வது என்பது வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது.

பல கருத்துக் கணிப்புகள் மாறி மாறி வந்தாலும், எல்லா கருத்துக் கணிப்புகளும் சொல்லும் ஒரு செய்தி என்னவென்றால், தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இடமில்லை என்பதுதான். எத்தனை முறை அமித் ஷா, மோடி தமிழ்நாட்டுக்கு வந்தாலும், தமிழ்நாட்டு மக்கள் பாஜகவுக்கு இடமளிக்க மாட்டார்கள் என்பது இந்தத் தேர்தலில் மீண்டும் உறுதியாகியுள்ளது.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று, திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும், இந்த ஆட்சி எப்படிப்பட்ட கொள்கையை கடைபிடிக்கப் போகிறது என்பதை நிதானமாகப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.

இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள் நீண்ட காலமாக இருந்தும், கடந்த காலத்தில் திமுக அரசு அதை நிறைவேற்றத் தவறிவிட்டது. தொழிலாளர்கள் மீது அடக்குமுறை, வழக்குகள், கைது போன்றவை தொடர்கின்றன. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியான போராட்டத்தை முன்னெடுக்கும்” என்றார்.