சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ல் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சி அமைக்கும் முயற்சியில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) ஆகிய கட்சிகள் ஏற்கெனவே தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் மூலம் தவெகவுக்கு ஆதரவளிக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.
இருப்பினும், ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களுக்கு இன்னும் 2 ஆதரவு மட்டுமே தேவைப்படும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தரப்பில் இருந்து வரும் முடிவு மிக முக்கியமானதாக மாறியுள்ளது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் 10ஆம் தேதிக்குள் பதவியேற்காவிட்டால் என்ன நடக்கும் என்பது குறித்து பெரும் கேள்விகளும் ஒரு பக்கம் எழுந்துள்ளது. ஏனென்றால், தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் 10ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 10ஆம் தேதிக்குள் யாரும் பதவியேற்கவில்லை என்றால், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், ஜனாதிபதி ஆட்சியை (Article 356) தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதுவார்.
இதன் மூலம் தமிழக சட்டமன்றம் செயல்படாது, தமிழகத்துக்கான சட்டங்கள் நாடாளுமன்றத்தால் இயற்றப்படும். 6 மாதத்திற்கு ஒருமுறை குடியரசுத் தலைவர் ஆட்சியை புதுப்பித்துக் கொண்டே செல்ல வேண்டும். மேலும், 3 ஆண்டுகள் வரை தேர்தல் நடத்தாமல் குடியரசுத் தலைவர் ஆட்சி ஒரு மாநிலத்தில் அமலில் இருக்கலாம். இதன் மூலம் தமிழகம் டெல்லியின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும் என அரசியல் வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.
இந்த நிலையில், தவெக ஆட்சியமைக்க ஆதரவு கோரி தவெக தரப்பில் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விசிக தலைவர் திருமாவளவன் இன்று மாலை முடிவை அறிவிக்கவுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் முழுமையான எதிர்பார்ப்பில் உள்ளது.
