எடப்பாடி பழனிசாமி இன்று முதல் ‘முகமூடியார்’ என்று அழைக்கப்படுவார் – டிடிவி தினகரன் விமர்சனம்!

பொய் சொல்லி யாரை ஏமாற்றப் பார்க்கிறார் எடப்பாடி கே. பழனிசாமி? என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் காட்டத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ttv dhinakaran and eps

சென்னை :அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி டெல்லியில் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று சந்தித்தார். சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு எடப்பாடி விளக்கம் அளிக்கையில் “மாண்புமிகு இந்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களை தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நேற்று சந்தித்து, தேச விடுதலைக்காக பாடுபட்ட தெய்வத் திருமகனார் பசும்பொன் ஐயா உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு இந்தியத் திருநாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா வழங்கிட வேண்டும் என AIADMK சார்பில் கடிதம் வழங்கி வலியுறுத்தினேன்,” என்று தெரிவித்தார்.

இருப்பினும், இந்த சந்திப்பு முடிந்த பிறகு காரில் முகத்தை கைக்குட்டையால் முடி கொண்டு சென்றார். இதனையடுத்து, அவர் முகத்தை மூடி கொண்டு காரில் வந்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் இது குறித்து தங்களுடைய கேள்விகளை எழுப்ப தொடங்கிவிட்டார்கள். அந்த வகையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முகத்தை முடி கொண்டு செல்லும் அவசியம் என்ன என தன்னுடைய கேள்விகளை எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ” வீர வசனம் பேசிக்கொண்டு எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்து ஏன்? உள்துறை அமைச்சரை சந்தித்து வெளியே வரும்போது முகத்தை மூடி வர வேண்டிய அவசியம் என்ன? என்ன காரணத்துக்காக அப்படி முகத்தை மூடி வந்தார் என்பதை பழனிசாமிதான் சொல்ல வேண்டும்” என தெரிவித்தார்.

மேலும், தொடர்ந்து பேசிய டிடிவி ” அந்த காலத்தில் மன்னர்கள் எதாவது சாதனை செய்தால் மன்னர்களை நாங்கள் இப்படி அழைக்கிறோம் என்று சொல்வார்கள் அதைபோலவே அண்ணன் பழனிசாமியை இன்று முதல் முகமூடியார் பழனிசாமி என்றுதான் அவரை இனி அழைக்க வேண்டும்” எனவும் நகைச்சுவையாக தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்த நாள் விழா சென்னையில் நடந்தபோது எடப்பாடி பேசியது அனைவர்க்கும் தெரியும்… எங்களுக்கு தன்மானம்தான் முக்கியம் என பயங்கரமாக சவுண்ட் விட்டு வீரவசனம் பேசிய எடப்பாடி பழனிசாமி, நேற்று இரவு அமித்ஷாவை சந்தித்திருக்கிறார். இப்படியெல்லாம் பொய் சொல்லி யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்? எனவும் கேள்விகளை எழுப்பினார். தமிழ்நாட்டு மக்களையும், மற்ற அரசியல் கட்சியை சேர்ந்தவர்களையும் எடப்பாடி பழனிசாமி இனிமேலும் கண்டிப்பாக ஏமாற்ற முடியாது” எனவும் அவர் தெரிவித்தார்.