ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு : 4 பேர் கைது!

ஈரோடு மாவட்டம் விளக்கேத்தி இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Erode Murder Case

ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. விளக்கேத்தி உச்சிமேடு மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த முதிய தம்பதியான ராமசாமி (75) மற்றும் அவரது மனைவி பாக்கியம் ஆகியோர், தங்கள் தோட்டத்து வீட்டில் கொலை செய்யப்பட்டனர்.

கொலை செய்தவர்கள்  நகை மற்றும் பணத்திற்காக முதிய தம்பதியினர் கொடூரமாகக் கொலை செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக விசாரணை செய்து தேடி வந்தார்கள். இதனையடுத்து, இன்று இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அறச்சலூரைச் சேர்ந்த ஆச்சியப்பன் (48), மாதேஸ்வரன் (53), ரமேஷ் (52) மற்றும் நகைக் கடை உரிமையாளரான ஞானசேகரன் ஆகியோராவர்.

கைது செய்யப்பட்ட ஆச்சியப்பன், மாதேஸ்வரன், மற்றும் ரமேஷ் ஆகியோர் மரம் ஏறும் தொழிலாளர்கள். இவர்கள், ராமசாமியின் தோட்டத்தில் தென்னை மரம் ஏறுவதற்காக அடிக்கடி வந்து சென்றவர்கள். இதனால், தம்பதியினரின் வீட்டு நிலைமை மற்றும் அவர்கள் தனியாக இருப்பது குறித்து அறிந்து பிளான் செய்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர், வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தைத் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. போலீசார், குற்றவாளிகளின் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தபோது, சம்பவத்தின்போது அவர்களின் இருப்பிடம் அந்தப் பகுதியில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இது, விசாரணையில் முக்கிய தடயமாக அமைந்தது. மேலும், இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்தை ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

வழக்கு விசாரணை மேலும் தீவிரமாக நடந்தபோது, நகைக் கடை உரிமையாளரான ஞானசேகரன் என்பவரும் இந்தக் குற்றத்தில் தொடர்புடையவர் எனக் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டார். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை இவர் வாங்கியிருக்கலாம் அல்லது குற்றவாளிகளுக்கு உதவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே, இவரிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்