நீலகிரி :மாவட்டம் குன்னூரில் உள்ளம் தேடி இல்லம் நாடி தேர்தல் பரப்புரை மேற்கொண்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், படுகர் இன மக்களின் பாரம்பரிய உடையை அணிந்து அவர்களுடைய பாரம்பரிய இசைக்கேற்ப உற்சாகமாக நடனமாடினார். மலைவாழ் மக்களுடன் மனமுவந்து கலந்து, அவர்களது வாழ்க்கை முறையைப் புரிந்துகொண்டு புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார். இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) குறித்து கடுமையாக விமர்சித்தார். “வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து வேலை செய்வதற்கும் வாழ்வாதாரம் ஈட்டுவதற்கும் எந்தத் தடையும் இல்லை. ஆனால் வாக்குரிமை என்பது அவரவர் பிறந்த மாநிலத்தில்தான் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் வடமாநிலத்தவருக்கு வாக்குரிமை கொடுத்தால் மக்கள் புரட்சி வெடிக்கும்” என்று எச்சரித்தார்.
அதனைத்தொடர்ந்து, 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேசிய பிரேமலதா, “வெறுமனே ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக கூட்டணி அமைப்பது தேமுதிகவின் வழக்கமல்ல. தொண்டர்களும் மக்களும் விரும்பும் வலுவான கூட்டணியைத்தான் அமைப்போம்” என்று தெளிவுபடுத்தினார். அதிமுக கூட்டணியில் இணையுமா என்ற கேள்விக்கு நேரடி பதிலளிக்காமல், “ஜனவரி 9-ம் தேதி கடலூரில் நடைபெறும் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0’-ல் எங்கள் கூட்டணி நிலைப்பாடு குறித்து தெளிவான அறிவிப்பு வெளியிடப்படும்” என்றார்.
மேலும், “தேமுதிக இன்று 234 தொகுதிகளிலும் வலுவாக உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் மட்டுமல்ல, அதற்குப் பிறகு வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் பெரிய வெற்றி பெறும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் தேமுதிகவின் பரப்புரை தீவிரமடைந்துள்ள நிலையில், பிரேமலதாவின் இந்தப் பயணமும் பேச்சும் கட்சித் தொண்டர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
