சென்னை :சென்னையில் இன்று தங்கம் விலை ஒரே நாளில் கடும் உயர்வை சந்தித்து, வரலாற்றிலேயே புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,11,200 ஆக உயர்ந்துள்ளதால், தங்கம் விலை ரூ.1.11 லட்சத்தை கடந்துள்ளது. இதன் மூலம் தங்க சந்தையில் பெரும் அதிர்வலை ஏற்பட்டுள்ளதுடன், நகை வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
இன்றைய தினம் காலை முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்தது. காலை நேரத்தில் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்த நிலையில், பிற்பகல் வர்த்தகத்தில் மேலும் ரூ.2,320 உயர்வு ஏற்பட்டது. இதனால் ஒரே நாளில் சவரன் ரூ.3,600 உயர்ந்துள்ளது. விலை உயர்வு படிப்படியாக நடந்தாலும், மாலை நேரத்தில் ஏற்பட்ட திடீர் உயர்வே சந்தையை அதிகம் ஆச்சரியப்பட வைத்ததாக நகை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் ஒரு கிராம் தங்கம் ரூ.450 உயர்ந்து, ரூ.13,900 என்ற புதிய உச்ச விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் உயர்ந்து வந்த நிலையில், இன்று ஏற்பட்ட இந்த பெரிய உயர்வு முதலீட்டாளர்களையும் பொதுமக்களையும் ஒரே நேரத்தில் கவனிக்க வைத்துள்ளது.
இதற்கிடையே, வெள்ளி விலையும் உயர்வைக் கண்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.10 உயர்ந்து, ரூ.340க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்வு, முதலீட்டு தேவையின் அதிகரிப்பு, உலக அரசியல் மற்றும் பொருளாதார நிலவரம் போன்ற காரணிகள் இந்த விலை உயர்வுக்கு காரணமாக இருக்கலாம் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் நாட்களிலும் தங்கம் விலை இதே போன்று ஏற்ற இறக்கங்களுடன் தொடர வாய்ப்பு இருப்பதாகவும் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
