புதிய உச்சத்தில் தங்கம் விலை...கடும் அதிர்ச்சியில் நகைபிரியர்கள்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.1,02,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது

GOLD PRICE

சென்னை :ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 23, 2025) காலையிலேயே கடுமையாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில், தங்கம் விலை மீண்டும் ரூ.1 லட்சத்தை கடந்து ரூ.1,02,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நகைப் பிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.22 கேரட் ஆபரணத் தங்கத்தின் கிராம் விலை ரூ.200 உயர்ந்து ரூ.12,770-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கம் கண்ட தங்கம் விலை, நேற்று ஒரே நாளில் ரூ.1,360 உயர்ந்து ரூ.1,00,560-ஐ எட்டிய நிலையில், இன்று மேலும் ரூ.1,600 உயர்வுடன் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.கடந்த 15-ஆம் தேதி தங்கம் விலை முதல்முறையாக ஒரு லட்சத்தை தாண்டி ரூ.1,00,120-ஐ எட்டியது. அதன்பிறகு சற்று குறைந்து 16-ஆம் தேதி ரூ.98,800-ஆகவும், 19-ஆம் தேதி ரூ.99,040-ஆகவும் விற்பனையானது.

வார இறுதியில் சற்று உயர்ந்து நேற்று ரூ.1,00,560-ஆக உயர்ந்தது. இந்தத் தொடர் உயர்வு சர்வதேச சந்தை மாற்றங்கள், டாலர் மதிப்பு மற்றும் உள்நாட்டு தேவை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இந்தக் கடும் உயர்வு திருமணங்கள், பண்டிகைகள் மற்றும் பிற கொண்டாட்டங்களுக்காக நகை வாங்க திட்டமிட்டுள்ள குடும்பங்களை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களுக்கு இது பெரும் சுமையாக அமைந்துள்ளது.தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் விலை குறையும் வரை காத்திருப்பது அல்லது உடனடியாக வாங்குவது என்பதில் குழப்பத்தில் உள்ளனர். சந்தை ஆய்வாளர்கள் அடுத்த சில நாட்களில் விலை நிலையாகலாம் என்று கணித்துள்ளனர்.