சென்னை :ஆபரணத் தங்கத்தின் விலை காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இந்த உயர்வு சுபநிகழ்ச்சிகள், திருமணங்கள் மற்றும் பண்டிகைகளுக்காக தங்கம் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக சந்தை ஏற்றம், டாலர் மதிப்பு மாற்றம், பொருளாதார நிலவரங்கள் ஆகியவை தங்க விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.
வார இறுதிநாளான இன்று (ஜனவரி 10) தங்க விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.100 உயர்ந்து ரூ.12,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.800 உயர்ந்து ரூ.1,03,200க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களில் ஏற்பட்ட சிறிய குறைவுகளுக்குப் பிறகு, இன்று மீண்டும் பெரும் ஏற்றம் கண்டுள்ளது.
தங்கத்துடன் போட்டியாக உயர்ந்து வரும் வெள்ளி விலையும் இன்று உயர்வு கண்டுள்ளது. சென்னை சில்லறை சந்தையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.7 உயர்ந்து ரூ.275க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி (பார் வெள்ளி) ரூ.2,75,000க்கு விற்பனையாகிறது. வெள்ளி நகை மற்றும் பொருட்கள் வாங்குபவர்களுக்கும் இந்த உயர்வு கூடுதல் சுமையாக அமைந்துள்ளது.தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நகை வாங்குபவர்கள் கவனமாக இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
பொங்கல் பண்டிகை மற்றும் திருமண சீசன் நெருங்கி வரும் நிலையில் தேவை அதிகரித்துள்ளது. வல்லுநர்கள் தங்க விலை இன்னும் உயர வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். சந்தை நிலவரத்தை கவனித்து, தேவையான போது வாங்குவது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது.
