விடுமுறை விட்டாச்சு...சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது – பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை!

தமிழ்நாட்டில் இன்றுடன் அரையாண்டு தேர்வுகள் நிறைவடையும் நிலையில், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN school leave

சென்னை :தமிழ்நாட்டில் அரையாண்டு தேர்வுகள் இன்றுடன் (டிசம்பர் 23, 2025) நிறைவடையவுள்ள நிலையில், பள்ளிக் கல்வித்துறை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் அல்லது கூடுதல் பாட வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை மூலம் தெளிவாக அறிவித்துள்ளார்.

அரையாண்டு தேர்வுகள் முடிந்த பிறகு வரும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு போதுமான ஓய்வு அளிப்பது அவசியம் என்று கூறியுள்ள இயக்குநர், கல்வி சுமையை அதிகரிக்கும் வகையில் எந்தவிதமான சிறப்பு வகுப்புகளும் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது மாணவர்களின் மன அழுத்தத்தை குறைத்து, அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முடிவாகும்.

மாறாக, இசை, நடனம், ஒவியம், கைவினைப்பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட கலைத்திறன்களில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் இவற்றைக் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிகள் தங்கள் வசதிக்கேற்ப உள்ளூர் கலைஞர்கள் அல்லது பயிற்சியாளர்களை அழைத்து இத்தகைய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்குவிப்பது அரசின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தல் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். பள்ளி நிர்வாகங்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் வலியுறுத்தியுள்ளார். இத்தகைய நடவடிக்கை மாணவர்களின் கல்வி அழுத்தத்தை குறைத்து, அவர்களின் படைப்பாற்றல் மற்றும் ஆர்வங்களை வளர்க்க உதவும் என்று கல்வியாளர்கள் வரவேற்றுள்ளனர்.இந்த சுற்றறிக்கை தமிழ்நாட்டில் மாணவர்களின் நலனை முன்னிறுத்திய அரசின் கொள்கையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. பெற்றோர்களும் இதை வரவேற்று, விடுமுறை நாட்களை மாணவர்கள் மகிழ்ச்சியுடன் செலவிட வாய்ப்பு கிடைக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.