சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி, தேர்தல் பிரச்சாரத்தின்போது “திமுக ஆட்சியின்போது கொரோனா வந்திருந்தால் முதலமைச்சர் ஸ்டாலினும் போயிருப்பார்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு திமுக தரப்பில் கடும் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில்,“ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் எப்படிப் பேச வேண்டும், ஒரு தலைவர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கணம் உண்டு. அந்த இலக்கணத்தை மீறி, மனித சமுதாயத்துக்கே புறம்பான, மிகக் கேவலமான பேச்சை எடப்பாடி பழனிச்சாமி நேற்று பேசியிருக்கிறார்.
அவருடைய வயிற்றெரிச்சலின் உச்சகட்டமாக, எங்களுடைய உயிரினும் மேலான அன்புத் தலைவர், இரண்டு கோடி தொண்டர்களின் உயிராக மதிக்கப்படும் தளபதி மு.க. ஸ்டாலினை மிகக் கீழ்த்தரமாகப் பேசியிருக்கிறார்.கொரோனா காலத்தில் நாடு எப்படி இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். எடப்பாடியின் ஆட்சியில் மக்கள் பரிதவித்தனர்.
ஆட்சியில் கிடைக்காமல், எல்லா ஆபத்துக்கும் ஆளாகி, நாள்தோறும் பிணக்குவியல்கள் அதிகரித்தன. திமுக ஆட்சி அமைந்து, தளபதி மு.க. ஸ்டாலின் முதலமைச்சரான பிறகுதான் கொரோனாவை கட்டுப்படுத்த முடிந்தது.கொரோனா உச்சத்தில் இருந்தபோது, மருத்துவமனைக்குள் செல்ல மருத்துவர்களே தடுத்த நேரத்தில், எங்கள் தலைவர் கோயம்புத்தூர் மருத்துவமனைக்குச் சென்று, கொரோனா நோயாளிகளை நேரில் பார்த்து, அவர்களுக்கு ஆறுதல் அளித்தார்.
அப்போது அவருடைய குடும்பத்தினரே, குறிப்பாக அவரது துணைவியாரே கதறி அழுதிருக்கிறார்கள். உதயநிதி ஸ்டாலின் கூட, ‘என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி’ என்று அதை நினைவுகூர்ந்திருக்கிறார்.அப்படிப்பட்ட தலைவரைப் பற்றி, ‘கொரோனா வந்திருந்தால் ஸ்டாலினும் போயிருப்பார்’ என்று எடப்பாடி பேசியிருப்பது மிகவும் கேவலமானது. எடப்பாடிக்கு கொலை, கொள்ளை, வன்முறை எல்லாம் கைவந்த கலை.
1979-ல் தனது பங்காளிகளில் மூன்று பேரை கொலை செய்த வழக்கில் அவர் குற்றவாளியாக இருந்தார். அன்று அதிமுக ஆட்சியில் இல்லாதிருந்தால், அவர் ஆயுள் கைதியாகத்தான் இருந்திருப்பார்.இப்போது அவரது பழைய வழக்குகள் ஒவ்வொன்றாக வெளியே வருகின்றன. சாத்தாங்குளம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொடைநாடு வழக்கும் அதே திசையில் சென்று கொண்டிருக்கிறது. எடப்பாடி இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்றால், வரலாறு அவருக்கு கடுமையான பாடத்தை கற்றுக் கொடுக்கும்” என்று ஆர்.எஸ். பாரதி எச்சரித்தார்.
