திமுக - அதிமுக கூட்டணி முயற்சி தகவல் எனக்கும் கிட்டியது - திருமாவளவன்

இடதுசாரிகள் எடுக்கின்ற முடிவியின் அடிப்படையில் தான் உயர்மட்ட குழுவில் விவாதித்து முடிவெடுத்த்தோம் எனவும் திருமாவளவன் தெரிவித்தார்.

Hero Image

சென்னை: தவெக ஆட்சி அமைக்கும் முயற்சியின்போது, திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயற்சிகள் நடைபெற்றதாக தகவல் தனக்கும் வந்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கழகம் (விசிக) தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த திருமாவளவன், “காங்கிரஸ் அதில் எந்த வழியில் தலையிட்டது என்று எனக்குத் தெரியாது. அதிமுக, திமுக மற்றும் அந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகள் அந்த முயற்சியை மேற்கொண்டதாக எனக்கும் தகவல் கிட்டியது” என்றார்.

மேலும், இடதுசாரி கட்சிகள் எடுத்த முடிவின் அடிப்படையில் தான் தங்கள் உயர்நிலைக்குழு விவாதித்து முடிவு எடுத்ததாகவும் அவர் விளக்கினார். “ஒரு அரசியல் கட்சியை நடத்துபவர்களுக்குத்தான் முடிவெடுப்பதில் உள்ள சிரமம் புரியும். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஒரு முடிவை எடுத்துவிட முடியாது” என்றும் அவர் கூறினார்.

திருமாவளவன் மேலும் கூறுகையில், “எங்கள் உயர்நிலைக்குழு எட்டாம் தேதி மாலை 6 மணி அளவில் ஆன்லைன் மூலம் (Zoom App) கூடியது. அந்தக் கூட்டம் இரவு 8.45 மணி வரை நடைபெற்றது. அந்த இரவே முடிவை அறிவிக்க முடியாது. எதிர்மறையான சில கருத்துகளும் வந்தன. எனவே, ஏற்கெனவே திட்டமிட்டபடி ஒன்பதாம் தேதி காலை 11 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கலாம் என்று எண்ணியிருந்தோம். ஆனால் அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை” என்றார்.

மேலும், “உயர்நிலைக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை தலைவர் என்கிற முறையில் நான் பரிசீலித்து இறுதி முடிவை எடுத்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். அதன்படி, ஒன்பதாம் தேதி காலை 10 மணிக்கு கட்சியின் பொதுச் செயலாளர்கள் சிந்தனைச் செல்வன், ரவிக்குமார் ஆகியோரை அழைத்து அவர்களுடன் மட்டும் கலந்தாய்வு செய்தேன்” என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.

தவெக ஆட்சி அமைக்கும் முயற்சியில் இடதுசாரி கட்சிகளின் முடிவு முக்கியப் பங்கு வகித்ததாகவும், அதன் அடிப்படையிலேயே தாங்கள் இறுதி முடிவு எடுத்ததாகவும் அவர் வலியுறுத்தினார்.இந்த விளக்கம், தமிழக அரசியல் களத்தில் தற்போது நிலவும் பல்வேறு ஊகங்கள் மற்றும் வதந்திகளுக்கு திருமாவளவன் தரப்பில் இருந்து வந்த முக்கிய பதிலாகப் பார்க்கப்படுகிறது.