சீட்டை காட்டி ஊடகங்களையும், பொதுமக்களையும் ஏமாற்றி உள்ளார் அண்ணாமலை என திமுக அமைப்புச் செயலாளர் பேட்டி.
சென்னையில் உள்ள கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, ரஃபேல் வாட்ச் தொடர்பான விவரங்களை வெளியிட்டார். இதன்பின், திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், செந்தில் பாலாஜி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், டி.ஆர் பாலு என பல பெயர் இடம் பெற்றுள்ளது.
ஊழல் பட்டியல் part-4:
மேலும், தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் 2024-க்குள் வெளியிடப்படும் என்றும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எந்த பிரச்சனை வந்தாலும் எதிர்க்க நான் தயார் எனவும் தெரிவித்த அவர், ஊழல் பட்டியலை part-4 வரை வெளியிடுவேன் எனவும் குறிப்பிட்டார். என் மண், என் மக்கள் என்ற பெயரில் ஊழலை எதிர்த்து ஜூலையில் பாதயாத்திரை நடத்தப்படும் எனவும் அறிவித்தார்.
ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை:
திமுகவினரின் பட்டியலை தொடர்ந்து, சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலை தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களுக்கு செல்ல நேரிடும். அண்ணாமலை எப்படி இவ்வளவு நாள் போலீஸ் துறையில் வைத்திருந்தார்கள் என வியப்பாக உள்ளது. எம்ஜிஆர் ஊழல் பட்டியலை வெளியிட்டபோது பார்த்தேன், படித்தேன், ரசித்தேன் என்றார் கருணாநிதி.
சட்டப்படி நடவடிக்கை:
திமுகவினரின் குறிப்பிட்ட ஒரு ஊழல் குறித்து அண்ணாமலை வெளியிட்டாரா?, அண்ணாமலை யாருக்கு பூ சுற்றுகிறார் என தெரியவில்லை. அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். யார் யார் பெயரில் அவதூறு பரப்பினாரோ அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள். 6 முறை ஆட்சியில் இருந்திருக்கிறோம், எங்கள் மீது ஒரு ஊழல் குற்றசாட்டாவது இருக்கிறதா என்றுள்ளார்.
சீட்டை காட்டி ஏமாற்றம்:
அண்ணாமலைக்கு உண்மையை சொல்லி பழக்கமில்லை, ரசீது என்பது வேறு, சீட்டு என்பது வேறு. ரபேல் வாட்ச் வாங்கியதற்கான பில் என்று கூறி சீட்டு ஒன்றை காட்டியுள்ளார். சீட்டை காட்டி ஊடகங்களையும், பொதுமக்களையும் ஏமாற்றி உள்ளார். மோசடி குறித்து நடவடிக்கை எடுக்க கூடிய அமைப்புகள் எல்லாம் பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா கட்டுப்பாட்டில் தான் உள்ளன. அண்ணாமலை பேட்டியை பார்த்தால் சிரிக்கத்தான் தோன்றுகிறது. அண்ணாமலை எப்படி ஐபிஎஸ் தேர்வு எழுதி தேர்வானார் என்பது தெரியவில்லை எனவும் ஆர்எஸ் பாரதி விமர்சித்தார்.