38 டிகிரி செல்சியஸ் வரை உயரப்போகும் வெப்பநிலை...எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

ஜூலை 17 முதல் 21 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்.

Hero Image

சென்னை : தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை மற்றும் காற்றில் உள்ள ஈரப்பதம் அதிகரிப்பதால், பொதுமக்கள் கடும் வெப்பத்தின் தாக்கத்தை உணரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக ஜூலை 17 முதல் 21-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிதீவிர வெப்பநிலைக்கான சூழல் நிலவும் என்றும், வெப்பக் குறியீடு (Heat Index) அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, ஜூலை 17 முதல் 21-ம் தேதி வரை தமிழகத்தின் ஒருசில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். இதனுடன், காற்றில் ஈரப்பதமும் அதிகமாக இருப்பதால் வெப்பத்தின் தாக்கம் மேலும் தீவிரமாக உணரப்படும். குறிப்பாக ஜூலை 17-ம் தேதி தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் வெப்பமான மற்றும் ஈரப்பதமான (Hot and Humid) வானிலை நிலவும் என்றும், இதனால் அசௌகரியம் ஏற்படக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இன்று (ஜூலை 17) மற்றும் நாளை (ஜூலை 18) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், பொதுமக்கள் மதிய நேரங்களில் தேவையற்ற வெளிப்புறப் பயணங்களைத் தவிர்க்கவும், போதிய அளவு தண்ணீர் அருந்தவும், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் உடல்நலப் பிரச்சினை உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்கவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

38 டிகிரி செல்சியஸ் வரை உயரப்போகும் வெப்பநிலை...எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!