மதுரை : ராஜா முத்தையா மன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 'தமிழ் தேசிய எழுச்சி மாநாடு' தொடர்பான செயற்குழு கூட்டம் மிகவும் எழுச்சிகரமாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் நிர்வாகிகள் திருமாவளவனை "வருங்கால தமிழக முதலமைச்சர்" என முழக்கமிட்டதுடன், அவர் "இந்தியாவின் பிரதமர்" ஆக வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
கூட்டத்தில் உரையாற்றிய விசிக தலைவர் தொல். திருமாவளவன், கட்சியின் வளர்ச்சி மற்றும் கொள்கை உறுதி குறித்துப் பேசியதாவது "விசிக இன்று மக்களுக்கு உரிய ஒரு வலுவான இயக்கமாகப் பரிணாமம் அடைந்திருக்கிறது.
இதற்கு நாம் முன்னெடுத்த நீண்டகாலப் போராட்டங்களும், நாம் உள்வாங்கியுள்ள ஆழமான கொள்கைகளுமே காரணம். எத்தனை சுனாமிகள் நம்மைத் தாக்கிய போதிலும், அதைத் தாங்கி நின்று வெற்றிபெறும் வல்லமை இந்த இயக்கத்திற்கு உண்டு" எனவும் பேசியிருக்கிறார்.
இது குறித்து "நம்முடைய இயக்கம் வெறும் பதவி மற்றும் அதிகாரத்திற்காக மட்டும் உருவானது அல்ல; சமூக நீதிக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிப்பதற்காகவும் உருவானது." தனது 3 முறை நாடாளுமன்ற உறுப்பினர் பணிக்காலத்தில் என்ன சாதித்தீர்கள் என்ற விமர்சனங்களுக்குப் பதிலளித்த திருமாவளவன், கட்சியின் வளர்ச்சியைப் புள்ளிவிவரங்களுடன் பட்டியலிட்டார்.
இது குறித்து பேசிய அவர் "நாம் இதுவரை 8 சட்டமன்ற உறுப்பினர்களை உருவாக்கியிருக்கிறோம். நாடாளுமன்ற உறுப்பினர்கள், துணை மேயர்கள் மற்றும் பேரூராட்சி மன்றத் தலைவர்களைக் களமிறக்கியுள்ளோம்." எனவும் தெரிவித்தார்.
"இந்தத் தேர்தலில் 2 சட்டமன்ற உறுப்பினர்களை வென்றெடுத்திருக்கிறோம். முக்கியமாக, திராவிட மாடல் ஆட்சியில் விசிக-வின் சார்பில் ஒரு அமைச்சரையும் உருவாக்கியிருக்கிறோம்." எனவும் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் விசிக அமைப்புச் செயலாளர்கள் உட்படப் பல முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு, கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் திருமாவளவனின் தேசிய அளவிலான பங்களிப்பு குறித்துப் பேசினர். விசிக-வின் இந்த எழுச்சிப் பயணம், வரவிருக்கும் அரசியல் களத்தில் தமிழகத்தின் முக்கிய சக்தியாக அக்கட்சி உருவெடுத்து வருவதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
