சென்னை : தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய பாஜக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஏற்கனவே தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் “தமிழ்நாட்டுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது” என்று வாய்மொழி உத்தரவாதம் அளித்திருந்தனர்.
இருப்பினும், ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா முழுக்க முழுக்க ஏமாற்றுத் திட்டமாக இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.நேற்று தொகுதி மறுவரையறைக்கு எதிராக போராட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், மசோதா நகலை எரித்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், இன்று தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், “தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை ஒன்றிய பாஜக அரசு மொத்தமாகத் திரும்பப் பெற வேண்டும்!” என்று வலியுறுத்தியுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது:“தமிழ்நாட்டின் அரசியலுக்கு மிக முக்கியமான நாள் இன்று. தொகுதி மறுவரையறைக்கு எதிரான நம் போராட்டங்களின் முடிவினை அறியப் போகும் நாள்.
நம்முடைய கடும் எதிர்ப்பினையும் போராட்டத்தினையும் தொடர்ந்து, தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் தொகுதி அளவு குறையாது என மாண்புமிகு பிரதமர் அவர்களும் உள்துறை அமைச்சர் அவர்களும் நேற்று நாடாளுமன்றத்தில் வாய்மொழி உத்தரவாதம் அளித்துள்ளனர்.
ஆனால், சொல் ஒன்று – செயல் வேறு என்பதாக, இவர்கள் தாக்கல் செய்துள்ள சட்டமுன்வடிவு முழுக்க முழுக்க ஏமாற்றுத் திட்டமாக இருக்கிறது. இதை நம்பவும் முடியாது, ஏற்றுக்கொள்ளவும் முடியாது எனத் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்.இந்தச் சட்டமுன்வடிவில் தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மூலம், இவர்கள் நினைத்தால் நினைத்த நேரத்தில், நினைத்த முறையில், எப்போது வேண்டுமானாலும் எதிர்காலத்தில், இவர்களுக்குச் சாதகமான வகையில், இந்திய மாநிலங்களின் தொகுதியளவை மாற்றியமைத்துக் கொள்வதற்கான வழிவகைகள் இந்தக் கருப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
பெரும் சூழ்ச்சியை உள்ளடக்கியதாக இந்தச் சட்டமுன்வடிவு இருக்கிறது.அவசரகதியில் இதனை நிறைவேற்றக் கூடாது. ஒன்றிய அரசு இதனை முழுவதுமாகத் திரும்பப் பெற வேண்டும். எண்ணிக்கை பலம் இருக்கிறது என்ற திமிரில், எங்களின் எதிர்ப்பை மீறி இதனை நிறைவேற்றினால், அதற்கான விளைவுகளைத் தமிழ்நாட்டில் நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.நேரு அவர்கள் இந்தியைத் திணிக்க மாட்டோம் என்றார், இருந்தவரை அந்த உறுதிமொழியைக் காப்பாற்றினார்.
ஆனால், தற்போதைய ஒன்றிய ஆட்சியாளர்களோ மாநில உரிமைகளைக் காப்பாற்றுவோம் எனச் சொல்லிக்கொண்டே அதனைச் சில்லு சில்லாக நொறுக்கும் வேலையில் ஈடுபடுகின்றனர்.
நாம் கோருவது, முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி அவர்களும், வாஜ்பாய் அவர்களும் அரசியலமைப்புச் சட்டத்திலேயே திருத்தம் செய்து, 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுசீரமைப்பை நிறுத்தி வைத்ததைப் போன்ற சட்டப் பாதுகாப்பு.#WithdrawDelimitationBill: தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய பாஜக அரசு செவிசாய்த்தே ஆக வேண்டும்!”முதலமைச்சர் ஸ்டாலினின் இந்தப் பதிவு, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உறுதியான எதிர்ப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் தீவிர விவாதத்தைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.
