த.வெ.க.வுக்கு அ.தி.மு.க ஆதரவு அளித்தால்...நாங்கள் இதை தான் செய்வோம் - திருமாவளவன்!

தவெக ஆட்சி அமைப்பதற்கு விசிக ஆதரவு அளிப்பது தவறில்லை என்ற முடிவில் நாங்கள் உறுதியாக இருந்தோம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் அதிமுகவுடன் தொடர்புடைய செய்திகள் குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “யாரும் அதிகாரபூர்வமாக என்னை அணுகவில்லை. என் நலவிரும்பிகள் பேசுகிறார்கள், மத்தியஸ்தம் செய்பவர்கள் பேசுகிறார்கள். அரசியலில் அது நடக்கும். ஆனால், எந்தக் கட்சியின் தலைவர்களும் அதிகாரபூர்வமாக என்னிடம் பேசவில்லை” என்று தெரிவித்தார்.

அதிமுக ஆதரவு குறித்து தவெகவுக்கு அதிமுக சிலர் ஆதரவு அளிப்பது குறித்து பேசிய அவர், “அதிமுகவை ஊழல் கட்சி என்று விஜய் சொன்னார். அதிமுக பாஜகவுடன் NDA-வில் பயணம் செய்த கட்சி. இன்றும் பாஜகவுடன் நட்பு கொண்டுள்ள கட்சி. அந்தக் கட்சியைச் சேர்ந்த சிலர் கட்சியை உடைத்துக்கொண்டு வெளியே வந்து தவெகவுக்கு ஆதரவளிக்கிறார்கள் என்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. அது அவர்களுடைய உட்கட்சி விவகாரம்” என்றார்.

மேலும், “ஒருவேளை தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளித்தால், எங்களது ஆதரவைத் தொடர்வது குறித்து உயர்நிலைக் குழுவில் நிர்வாகிகளுடன் பேசி முடிவு செய்வோம்” என்றும் திருமாவளவன் கூறினார்.

திமுக-அதிமுக கூட்டணி பேச்சு குறித்துதிமுக-அதிமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றதா எனக் கேள்வி எழுப்பப்பட்டதற்கு, “அது gossip தான். அதிகாரபூர்வமான தகவல் கிடையாது. யாரும் தனிப்பட்ட முறையில் அல்லது அதிகாரபூர்வமாக என்னிடம் அப்படி ஒரு முயற்சி எடுக்கிறோம், ஒத்துழைப்பு கொடுங்கள் என்று சொல்லவில்லை” என்று திருமாவளவன் விளக்கினார்.

மேலும், “எல்லா இடங்களிலும் பேசப்படும் கிசுகிசுப்பு, முணுமுணுப்பு அவ்வளவுதான். அதைத்தான் நான் சொன்னேன். இது மூடு மந்திரமான செய்தி அல்ல. இரண்டு பேருக்கு இடையில் தனியாக பேசப்படும் விஷயம் கூட இல்லை. பத்து பேர் முன்னால் தான் எல்லாரும் பேசுகிறார்கள்” என்றும் அவர் கூறினார்.

திருமாவளவன் மேலும் தெரிவித்ததாவது: “நாங்கள் திமுக கூட்டணியில்தான் தொடருகிறோம். தவெக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு நல்குகிறோம். அந்த ஆதரவு unconditional support. எந்தச் சூழலிலும் அமைச்சரவையில் இடம் பெற மாட்டோம் என ஏற்கனவே அறிவித்துவிட்டோம். எங்கள் கட்சித் தோழர்கள் சிலர் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என இன்னும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கட்சியின் தலைவர் என்கிற முறையில் நான் எடுத்த முடிவை அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டேன்” என்றார்.