தென்காசி :2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள சூழலில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில் ஈடுபட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு தீவிரமாக பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று தென்காசி மாவட்டத்திற்கு சென்ற அவர் அங்கு தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி திமுக குறித்து விமர்சனம் செய்தும் பேசினார்.
இது குறித்து பேசிய அவர் ” தமிழ்நாட்டில் 2019-2020 ஆம் ஆண்டுகளின் கணக்கெடுப்பின்படி, அதிமுக ஆட்சியில் 54% மாணவர்கள் பட்டப்படிப்பு பயின்று வருவதாகவும், இந்தியாவிலேயே தமிழ்நாடு பட்டப்படிப்பு பயில்வோர் பட்டியலில் முதலிடம் வகித்தது. இது தமிழ்நாட்டின் கல்வித்துறையில் அதிமுக ஆட்சியின் சாதனையை எடுத்துக்காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அதிமுக அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வந்ததாகவும் அவர் வலியுறுத்தினார்.திமுக ஆட்சியை விமர்சித்த பழனிசாமி, தற்போதைய அரசு மக்களுக்கு பல்வேறு வரிகளை உயர்த்தியுள்ளதாக குற்றம்சாட்டினார். வீட்டு வரி, குடிநீர் வரி மற்றும் இந்தியாவிலேயே முதன்முறையாக குப்பைக்கு வரி விதித்தது திமுக அரசு தான் என அவர் கூறினார். இதனால் மக்களின் வாழ்க்கைச் சுமை அதிகரித்துள்ளதாகவும், திமுக ஆட்சி மக்களுக்கு நிதிச்சுமையை ஏற்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” மக்களுக்கும், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுவதாக கூறினார். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுக அரசு, மக்கள் நலனில் அக்கறை இல்லாத ஆட்சியை நடத்துவதாக அவர் விமர்சித்தார். மக்களின் நலனை மையமாகக் கொண்டு செயல்படுவது அதிமுக மட்டுமே என்று அவர் வலியுறுத்தினார்.அதிமுக ஆட்சியில் மக்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகவும், அதற்கு உதாரணமாக திருநெல்வேலியில் இருந்து தென்காசியை தனி மாவட்டமாக பிரித்து உருவாக்கியதை பழனிசாமி சுட்டிக்காட்டினார்.
மேலும், மக்களின் தேவைகளைப் புரிந்து, அவர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அதிமுக ஆட்சி செயல்பட்டதாக அவர் கூறினார். மக்களுக்கான அரசாக அதிமுக தொடர்ந்து இருக்கும் என்றும் அவர் உறுதியளித்தார். இறுதியாக, அதிமுக ஆட்சியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச மடிக்கணினி திட்டம் உள்ளிட்ட பல நல்ல திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டதாக பழனிசாமி குற்றம்சாட்டினார். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், மாணவர்களுக்கு மீண்டும் இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். மக்களின் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தென்காசியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
