நாகை :நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், நேற்றைய தினம் நாகப்பட்டினத்தில் பரப்புரை மேற்கொண்டார். இது அவரது அரசியல் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாகும். சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக நாகப்பட்டினம் சென்று, புத்தூர் அண்ணா சிலை அருகே நண்பகல் 12:30 மணியளவில் பரப்புரை மேற்கொண்டார்.
பரப்புரையின் போது, திமுகவை நேரடியாக விமர்சனம் செய்தார். இந்த நிலையில், நாகை பரப்புரையின்போது விஜய் பேசியது அனைத்தும் பொய் என்று நகை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர், விசிக எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆளூர் ஷாநவாஸ், ”பத்திரிகையாளர்களை சந்திக்க துணிச்சல் இல்லாத விஜய், அண்ணாமலை, ஆர்.என்.ரவியை போன்று அவதூறு அரசியல் செய்வதாக சாடினார். மேலும், அவதூறான இட்டுக்கட்டிய பொய்களையும், வாய்க்கு வந்ததையும் பேசுவதை நிறுத்திவிட்டு, தவெக கொள்கையை முதலில் தெரிவிக்க வேண்டும் எனவும், இப்படியே பேசினால் மக்களால் நிராகரிக்கப்படுவார் விஜய் எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ”விஜய் பரப்புரையின்போது மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் என அவர் கட்சியின் மாவட்டச் செயலாளர்தான் கடிதம் கொடுத்திருக்கிறார். ஆனால் அரசாங்கம் திட்டமிட்டு செய்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார் விஜய். முன்னுக்குப் பின் முரணாக பொய்யை சொல்லி கவனத்தை ஈர்க்க முயற்சிக்கிறார்”
